சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000 வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட 360 சதுர அடியாகும்.
பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் டான்செம் சிமென்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமென்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு என ரூ.135.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.
The post கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழக அரசு மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.