×

சபரிமலையில் இன்று முதல் அறிமுகம்; புல்மேடு, பெரிய பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு உடனடி தரிசனம்

திருவனந்தபுரம்: புல்மேடு, எருமேலி (பெரிய பாதை) வழியாக வரும் பக்தர்களுக்கு இன்று முதல் உடனடி தரிசன வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பம்பை-சன்னிதானம் பாதையைத்தான் பயன்படுத்துகின்றனர். இந்த பாதையில் சுமார் 5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும். தவிர புல்மேடு மற்றும் எருமேலி (பெரிய பாதை) வழியாகவும் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். இது அடர்ந்த வனப்பகுதியாகும்.

இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் இருந்து புல்மேடு பாதை தொடங்குகிறது. இதில் சுமார் 15 கிமீ தூரத்துக்கு பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். பெரிய பாதை என்று அழைக்கப்படும் எருமேலி பாதையின் தூரம் சுமார் 50 கிமீ ஆகும். இவை இரண்டும் வனப்பகுதி என்பதால் பக்தர்களுக்கு வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்காக வனத்துறையினர் இந்த பாதையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பக்தர்கள் இந்த பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நீண்ட தூரம் நடந்து செல்லும் பக்தர்கள் களைப்படைவதால் அவர்களுக்கு உடனடியாக தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி இந்த பாதைகளில் வரும் பக்தர்களுக்கு இன்று முதல் உடனடி தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டு வனத்துறையுடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. புல்மேடு பாதையிலுள்ள முக்குழி பகுதியில் இன்று சபரிமலை துணை கலெக்டர் அருண், பக்தர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த அடையாள அட்டையுடன் வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து சுவாமி ஐயப்பன் ரோடு வழியாக சன்னிதானத்திற்கு செல்லலாம். மரக்கூட்டம் பகுதியிலிருந்து சரங்குத்தி வழியாக செல்லாமல் சந்திரானந்தன் பாதை வழியாக இவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சன்னிதானத்தில் தரிசனத்திற்காக இவர்களுக்காக தனி வரிசை ஏற்படுத்தப்படும். இந்த வரிசையில் சென்றால் பக்தர்களுக்கு உடனடியாக ஐயப்பனின் தரிசனம் கிடைக்கும்.

The post சபரிமலையில் இன்று முதல் அறிமுகம்; புல்மேடு, பெரிய பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு உடனடி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Pullmede ,Great Path ,Thiruvananthapuram ,Pulmadu ,Erumeli ,Bambai-Sannithanam ,Pullmedu ,
× RELATED சபரிமலை கோயில் அருகே திடீர் தீ விபத்து