×

பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: மாநிலங்களவையில் அமித் ஷா உறுதி

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் பாஜக ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பாஜக ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) நிறைவேற்ற எங்களது அரசு முன்முயற்சி எடுத்தது. இருந்தாலும் ஜனநாயக செயல்முறையைப் பின்பற்றியே செயல்படுத்தப்படும். சமூகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் பொது சிவில் சட்டத்தை உத்தரகாண்ட் மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக் காலத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரத் தவறிவிட்டது. ஆனால் பாஜக அதை ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்தும். இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்துவதன் மூலம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. அப்படி என்றால், முஸ்லீம் தனிநபர் சட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கூறினார்.

பொது சிவில் சட்டமானது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரே மாதிரியான சட்டமாக இருக்கும். மதம் அல்லது சாதியின் அடிப்படையில் இல்லாமல், அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டமாக இருக்கும். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், திருமணம், விவாகரத்து, குழந்தைகளைப் பெறுதல், சொத்துக்களைப் பிரிப்பது போன்ற விஷயங்களில் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகள் இருக்கும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறின.

The post பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: மாநிலங்களவையில் அமித் ஷா உறுதி appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Rajya ,Sabha ,New Delhi ,Home Minister ,BJP ,Rajya Sabha ,Union Home Minister ,
× RELATED காங். குடும்ப உரிமையாக கருதி...