கோவா: ஆம்ஆத்மி மூத்த எம்பிக்கு எதிராக ₹100 கோடி இழப்பீடு கேட்டு கோவா முதல்வரின் மனைவி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆம்ஆத்மி மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் அளித்த பேட்டியில், ‘கோவா பாஜக முதல்வர் பிரமோத் சாவந்தின் மனைவி சுலக்ஷனா சாவந்த் மூலம் அரசுப் பணிக்கு பல தேர்வர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கொடுத்துள்ளனர்’ என்று கூறினார். இவ்விவகாரம் கோவா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கண்ட புகாரின் பேரில், அரசுப் பணிக்கான பண மோசடி குறித்து மாநில காவல்துறை விசாரித்து வருவதாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார்.
இந்நிலையில் தன் மீது சஞ்சய் சிங் அவதூறு பரப்பியதாக முதல்வரின் மனைவி சுலக்ஷனா சாவந்த், வடக்கு கோவாவில் உள்ள பிச்சோலிம் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், அரசுப் பணிக்கு லஞ்சம் வாங்கியதாக எனது பெயரை குறிப்பிட்டு பேட்டியளித்துள்ளார். அவரது கருத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே எனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததால், அவர் என்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
எனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவதை தடை விதிக்க வேண்டும். தொடர்ந்து எனக்கு எதிராக அவதூறு பரப்பும் சஞ்சய் சிங், 100 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இம்மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம், வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் சுலக்ஷனா சாவந்த்தின் மனுவிற்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.
The post ஆம்ஆத்மி மூத்த எம்பிக்கு எதிராக ₹100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: கோவா முதல்வரின் மனைவி அதிரடி appeared first on Dinakaran.