×

மாநகரில் தாழ்வான பகுதிகளை சூழ்ந்த மழைநீர் அகற்றும் பணி

 

திருச்சி, டிச.18: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து மேயர் அன்பழகன் நேற்று நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தில்லைநகர் 22வது வார்டு பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வரும் சுகாதாரப் பணிகளை மாநகர மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை போர்க்கால நடவடிக்கையாக அகற்றவும், நோய் தொற்று பரவாமல் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
முன்னதாக மண்டலம் எண்.4, வார்டு எண்.56 பகுதி பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்ததையும் மாநகர மேயர் நேரில் ஆய்வு செய்து உரிய அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து, மாநகராட்சி மண்டலம் எண்.4, வார்டு எண்.56ல் கருமண்டம் கொல்லங்குளம் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வரும் பணியையும் ஆய்வு செய்த மேயர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வுகளின் போது, நகரப்பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கமிஷனர் சண்முகம், செயற்பொறியாளர் செண்ணு கிருஷ்ணன், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post மாநகரில் தாழ்வான பகுதிகளை சூழ்ந்த மழைநீர் அகற்றும் பணி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mayor ,Anbazhagan ,Trichy Corporation ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்