×

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஜனவரி அல்லது பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு

சென்னை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று முதன் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நுழைந்தார்.

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 14ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரும் 20 மாதங்கள் மட்டுமே எம்எல்ஏ பதவியில் இருந்து மரணம் அடைந்துள்ளார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் நேற்று அறிவித்தது. இந்த தகவல் கடிதம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஒரே ஆட்சி காலத்தில், மூன்றரை ஆண்டுகளில் 2 முறை இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு தொகுதி சந்திக்க இருக்கிறது. வாக்காளர்கள் 3வது முறையாக வாக்களிக்க உள்ளனர்.

The post ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஜனவரி அல்லது பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Erode East ,EVKS Ilangovan ,Chennai ,2021 assembly elections ,Congress ,DMK ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு: பிப்ரவரியில் இடைத்தேர்தல்?