சிறந்ததை நோக்கிய பயணம்!

நன்றி குங்குமம் டாக்டர்

நோய் நாடி நோய் முதல் நாடி

பாடப்புத்தகத்திலும் மற்றும் அபியும் நானும் படத்தின் மூலமாகவும் அலெக்சாண்டர் குதிரையைப் பற்றி இன்னும் பரவலாக தெரிந்துகொண்டோம். ஏனென்றால் அவருடைய பனிரெண்டாம் வயதில் மிகச்சிறந்த குதிரையை அடக்கியுள்ளார். பிரகாஷ்ராஜ் அலெக்சாண்டர் குதிரையின் பெயரைச் சொல்லும்போது, ஜாலியாக ரசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அலெஸ்சாண்டர் மருத்துவர்களுக்கு என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. கி.மு 300 அவர் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட வியாதிகளுக்கு மருத்துவத்துறையும், மருத்துவர்களும் பலவிதமான ஆய்வுகளையும், சிகிச்சை முறைகளையும் கண்டறிந்து கொண்டிருந்தனர்.

அந்நேரத்தில் ஏற்பட்ட வைரஸ் காய்ச்சலால் அந்நாட்டு மக்கள் பலரும் பாதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவர்களும் அவர்கள் கண்டுபிடித்த சிகிச்சை முறையையும், மருந்துகளையும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கொடுத்தார்கள். அதில் பலர் பிழைத்துக் கொண்டார்கள். சிலர் காய்ச்சலின் தீவிரத்தால் இறந்தும்விட்டார்கள். அதில் மிக முக்கியமாக அலெக்ஸ்சாண்டரின் நெருங்கிய நண்பரான ஹெபாஸ்டின் இறந்துவிட்டார்.

அந்தக் கோபத்தில் அவர் நாட்டில் மருத்துவ சிகிச்சையால் பிழைத்த மக்களை மறந்து விட்டு, அவரது நண்பரின் இறப்பை மட்டும் கருத்தில் கொண்டு, ஹெபாஸ்டினுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை ஈவு இரக்கமின்றி கொன்று விட்டார். இவ்வாறாக அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை மருத்துவத்துறையைப் பற்றி புரிந்துகொள்ளாமல் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இதற்காகத்தான், அந்தக் காலங்களில் மட்டுமில்லாமல், இன்றும் நமக்கான குடும்ப டாக்டர் என்று இருக்கும் போது நாம் அனைவரும் அவரை நம்புவோம். அதாவது குடும்ப டாக்டர் என்பவர் நாம் வசிக்கும் இடத்துக்கு அருகில் மருத்துவமனை வைத்திருப்பவர். அவரை நாம் மட்டும் சந்திக்காமல், நம் வீட்டினரும் தொடர்ந்து சந்திப்பார்கள். அதனால் அவருக்கு நம்முடைய மரபணு ரீதியான பிரச்சனை, குடும்ப உறுப்பினர் ஒருவர் பாதிக்கப்படும் போது, மற்றவருக்கு அதனால் ஏற்படும் விளைவுகள் என்று அனைத்தையும் கூறிவிடுவார். அவரின் அறிவுரைப்படிதான், நாம் பெரிய மருத்துவமனைக்கோ அல்லது பெரிய மருத்துவரையோ சந்திக்க முன் வருவோம்.

அந்த மருத்துவமனையிலோ அல்லது பெரிய மருத்துவர் அளிக்கும் சிகிச்சையில் நோயாளிக்கு ஏதும் பிரச்சனை ஏற்பட்டாலும், குடும்ப டாக்டர் கூறிய வார்த்தைகளை மட்டும் நம்பி, அதனால் ஏற்படும் விளைவுகளைக்கூட நாம் ஏற்றுக் கொள்ள முன் வந்திருப்போம். ஏனென்றால், நம்மைப் பற்றியும், நம் உறவினர்கள் மீதான நமக்குள் இருக்கும் அன்பும், அரவணைப்பும் குடும்ப டாக்டருக்குத் தெரியும் என்ற பிணைப்புதான் ஒரு ஆரோக்கியமான உறவை பேமிலி டாக்டரிடம் ஏற்படுத்தியது.

மருத்துவரிடமும், வக்கீலிடமும் மட்டும் உண்மையை மறைக்காதீர்கள் என்று கூறும் வாக்கியத்தின் உண்மை என்னவென்றால், அவர்களைத் தேடிவருபவர்களுக்கு, அதாவது நமக்குத் தேவையானதை, சரியானதை மட்டுமே செய்யக்கூடிய ஒரு ஆத்மார்த்தமான உறவாக இருக்கும் என்ற நம்பிக்கைதான் இந்தக் கூற்றின் அர்த்தமாக இருக்கும். மருத்துவருக்கும், நோயாளிக்கும் இருக்கும் உறவானது வெளிப்படையாகச் சொல்ல முடியாத, ஆனால் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் அக்கறையை மருத்துவரைச் சந்திக்கும் அனைவராலும் உணர முடியும்.

ஏனென்றால், தற்போதைய நம் வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள சோம்பேறித்தனமும், தேவையானஅளவு உடல் உழைப்பு இல்லாததும், தூக்கமின்றி இருப்பதும், மனஅழுத்தமும், அதீத உணவு சார்ந்த அடிக்சன் என்று பல விதமான காரணங்களை நாம் தினமும் நம் உடலுக்கும், மனதுக்கும் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறோம். இதனால் நாம் வளர வளர பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறோம்.

இளம் வயதிலேயே திடீரென்று ஹார்ட் அட்டாக் வருகிறது, சிலருக்கு டயாபெடிக் வருகிறது. ஏன் வருகிறது என்று நமக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் கூறி விடுவோம். நம்மைச் சரி செய்யாமல், நோயைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். தற்போதைய காலத்தில் வயது வித்தியாசமில்லாமல், எந்த நோய் ஏற்பட்டாலும், அதற்கேற்ப சிகிச்சை முறை நம் நாட்டில் மிக எளிதாக கிடைக்கிறது. அதனால் தான், இன்றைக்கு தனிமனிதனின் ஆயுட்காலமும் அதிகரித்திருக்கிறது.

இன்றைய மருத்துவத்துறை விழிப்புணர்வால், உடலில் சிறு கோளாறு தெரிந்தாலும், சிகிச்சைக்கு தயாராகும் மனநிலையில் முதலில் இருக்க வேண்டும். இந்த புரிதல் இல்லாத போது, நோய் திடீரென்று தாக்கும் போது, நம் முன் இருக்கும் மருத்துவர்கள் மீது நம்மை மீறி கோபப்படுகிறோம். முதலில் பள்ளிகளில் இருந்தே மருத்துவத்தைப் பற்றிய அடிப்படை புரிதலை நாம் ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக தலையில் ஹெல்மெட், கை உறை, கால் உறை, கிட்னிகார்டு என்றெல்லாம் போட்டுக் கொள்வார்கள். ஆனால், இதுவே ரோட்டில் பைக்கில் ஹெல்மெட் போடாமல், அதீத வேகத்தில் செல்வார்கள். அப்புறம் அடிபடும் போது, இப்படி ஆகுமென்று தெரியாது என்று புலம்புவார்கள்.

இங்கு ஒரு மனிதர் விபத்தால் அல்லது நோயால் பாதிக்கப்படும் போது நோயாளிக்கு இருக்கும் நோயினைப் பற்றி மருத்துவர் தான் தொடர்ந்து படிக்கிறார். அதனால் மருத்துவர் நோய்க்கு ஏற்றவாறு, மாத்திரைகளையும் கொடுப்பார். எந்தவொரு செயலும் அதற்கேற்ப எதிர்வினையைக் கொண்டிருக்கும். அது போல், ஒவ்வொரு நோயாளியின் உடலுக்கு ஏற்றவாறு, மாத்திரைகள் வேலை செய்தாலும், சில நேரங்களில் பக்கவிளைவுகளும் ஏற்படும். இன்றைக்கு மருந்தினால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகமாகும் போது, உடனே மருத்துவர்கள் நோயாளியின் வயதிற்கு ஏற்றவாறும், நோயின் தன்மைக்கு ஏற்றவாறும் மருந்தின் அளவினை குறைத்தும், அதிகரித்தும் கொடுப்பார்கள். அதனால் தான், மக்கள் உடலில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், மருத்துவத்துறையை அதிகமாக நம்பி வருகிறார்கள்.

இந்த உலகில் தொழிலே தெய்வம் என்று மிகச்சரியாக வேலை பார்க்கும் அனைவரும் தெய்வத்துக்கு சமமானவர்கள். எந்தவொரு துறையிலும் நூறு சதவீதம் சரியாகச் செயல்படும் போது, பெரும்பாலும் அதற்கான விளைவுகள் வெற்றியைத் தான் தருகின்றன. ஆனால், மருத்துவத்துறையில் மட்டும் நூறு சதவீதம் சரியாக செயல்பட்டாலும், சில நேரங்களில் விளைவுகள் வேறு விதமாக மாறி விடுகின்றது. ஏனென்றால், மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயின் தன்மையும், மருந்து செயல்படும் விதமும் மிகச்சரியாக மருத்துவர் சிகிச்சையளித்தாலும், சில நேரங்களில் தவறாக மாறி விடுகிறது. ஏனென்றால், Disease will not read books, Doctors only Read Books. நோயைப் பற்றியும், நோயாளியைப் பற்றியும் தொடர்ந்து மருத்துவர்கள் தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதையும் மீறி, இந்த உறவில் எங்கு ஒரு இடைவெளி உருவாகிறது என்றால்,, பாரதி ஓரிடத்தில் கூறுவார், ‘அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்’ என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப்போகும் என்பார். நமது வரலாற்று காலம் தொட்டே, மனிதர்கள் அவர்களின் உடல் பாதிப்பிற்கு மருத்துவரிடம் செல்லும் போது, நோயாளியோ அல்லது அவரது உறவினரோ மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவர்களின் பாசத்தை வெளிப்படுத்த முனைவார்கள்.

அந்த இடத்தில் மருத்துவர் அவரின் அறிவையும், அவரது எதிரில் இருப்பவர்கள் உணர்ச்சியையும் வெளிப்படுத்துபவராகவும் இருப்பார்கள். இதில் மருத்துவரின் சிகிச்சையால் நோயாளியின் உடல் பாதிக்கப்படும் போது, அவர்கள் மருத்துவரையே குற்றம் கூறுவார்கள். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக நடக்கிறது.

முதலில் நமது உடலுக்கு நாம்தான் பொறுப்பு என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அந்த எண்ணம் தான், மருத்துவத் துறை மீதும், மருத்துவர் மீதும் நம்பிக்கையை உண்டாக்கும். மஹாகவி சொன்னது போல், அறிவு யாவும் பயிற்சியில் வென்றே கடமை செய்வீர். அதாவது மருத்துவர்கள் அவர்களின் பள்ளிப்படிப்பு முடிந்த நாளிலிருந்து மருத்துவத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவருக்கு ஒரு மனித உடலில் இந்த வயதில் இந்த நோய் ஏற்பட்டால் என்ன சிகிச்சையளிக்க வேண்டுமென்பதும், எந்த மருந்தினை குறைந்த பக்கவிளைவுடன் கொடுக்க முடியும் என்பதையும் தொடர்ந்து அவரது அறிவுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

அந்த அறிவை அவர் மிகவும் நேர்த்தியாக, கடமையாக செய்து கொண்டேயிருக்கிறார். அதாவது, மருத்துவர் மனிதர்களுக்குச் உதவுவது என்பது சேவையாகாது. சிகிச்சையளிப்பது என்பது அவரது வாழ்நாளில் செய்ய வேண்டிய ஒரு கடமையாகச் செய்கிறார். மருத்துவத் துறையைப் பொறுத்தவரை ஒழுங்கும், கீழ்படிதலும், நேரம் தவறாமையும் மிக முக்கியப் பண்புகளாக ஒவ்வொரு மருத்துவரும் முடிந்தளவு கடைப்பிடிப்பார்கள். இவை அனைத்துமே மனிதர்கள் மருத்துவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குச் செய்யும் கடமையாகப் பார்க்கிறார்கள்.

அதனால் மருத்துவருக்கும், வெகுஜன மக்களுக்கும் இருக்கும் உறவில் ஏற்படும் சில பாதிப்புகளை பெரிதுபடுத்தாமல் இருப்பதே சிறந்தது. அப்பொழுது மட்டுமே மருத்துவர்களும், சில இக்கட்டான நேரங்களில், ரிஸ்க் எடுத்து மனித உயிர்களைக் காப்பாற்றுவார்கள். மருத்துவர்களை தாக்குவதும், பயமுறுத்துவதும் என்பது, மனிதர்கள் தன் கண்ணைத் தானே குத்திக் கொள்வதைப் போன்றதாகும். சமூக மக்களும், மருத்துவர்களும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடனும், நோயின் தன்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவ மனப்பான்மையுடனும் இருப்பதே ஆரோக்கிய உறவுக்கு வழிவகுக்கும்.

The post சிறந்ததை நோக்கிய பயணம்! appeared first on Dinakaran.

Related Stories: