குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்

நன்றி குங்குமம் தோழி

சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் ேபான்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. அதே சமயத்தில் தற்போது குழந்தைகளை தாக்கும் ஒரு வகையான சரும பிரச்னை குறித்து விவரிக்கிறார் ISMO மருத்துவமனையின் சரும நிபுணர் ஹேமா ஆனந்தி. இவர் தற்போது குழந்தைகளுக்கு அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்ற சரும பிரச்னை ஏற்படுவதாகவும் அதற்கான காரணம் மற்றும் நிவர்த்திகள் குறித்து விவரித்தார்.

அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்பது மிகவும் முக்கியமான மற்றும் கவனிக்கப்பட வேண்டிய சரும பிரச்னை. இந்த நிலை இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடையே அதிகமாகக் காணப்படுகிறது. இது பொதுவாக நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனை பிரதிபலிக்கக்கூடிய இன்சுலின் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறியாகும்.அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்பது சருமம் தடித்தும் அந்த இடம் கருமையாக தோற்றமளிக்கும்.

இவை பொதுவாக கழுத்து, உடலில் மடிப்பு உள்ள பகுதிகள் மற்றும் இடுப்பு போன்ற இடங்களில் ஏற்படும். இந்தப் பிரச்னை ெபரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது என்றாலும் அடிப்படையில் அந்தப் பிரச்னைக்கான தீர்வினை நாம் கையாள்வது அவசியம். குறிப்பாக சருமம் சுகாதாரமற்ற நிலையில் இருந்தால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் இன்றைய காலக்கட்டத்தில் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாக குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். இந்த சரும பிரச்னைக்கான காரணி உடல் பருமனாக இருந்தாலும், அதற்கான தீர்வினை நாம் சரும நிபுணர்களிடம் பெறுவது அவசியமாகும்.

அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் இன்சுலின் எதிர்ப்பால் ஏற்படுகிறது. இன்சுலின் என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை உடலில் உள்ள அணுக்கள் உறிஞ்ச உதவக்கூடிய ஒரு வகையான ஹார்மோன். இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும்போது, உடல் கூடுதலாக இன்சுலின் உற்பத்தியை மேற்கொள்ளும். இதனால் சருமத்தில் உள்ள அணுக்கள் அதிகமாக வளர்ச்சி அடையும். அது சருமத்தில் கருமை மற்றும் தடிப்பினை ஏற்படுத்தும்.

இதனை நாம் கவனிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் டைப் 2 நீரிழிவு உருவாக வாய்ப்புள்ளது. சிலருக்கு மரபியல் காரணமாகவும் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள் அல்லது நோயின் தாக்கத்தினாலும் ஏற்படும். இது மிகவும் குறைந்த சதவிகிதம்தான். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு, கலோரி மிகுந்த உணவு, குறைவான உடற்பயிற்சி மற்றும் உடல் பருமன் காரணமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சருமத்தில் திடீரென்று கருமை மற்றும் தடிமன் ஏற்பட்டால் உடனடியாக சரும நிபுணரின் ஆலோசனை மூலம் அதற்கான காரணம் அறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். மேலும் இந்த வகை சரும நோய்க்கு நேரடி மருந்துகள் இல்லை என்றாலும், இந்த நோய் ஏற்படக்கூடிய அடிப்படை காரணங்களை சரி செய்தாலே நல்ல மாற்றம் ஏற்படும்.முதலில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் பிரச்னையினை முற்றிலும் நீக்க முடியும்.

பாலன்ஸ்ட் டயட்: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நல்ல கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பையும் தவிர்க்க உதவும்.
உடற்பயிற்சி: குழந்தைகள் தினமும் குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.மொபைல் நேரம்:உடற்பயிற்சியில் ஈடுபடாமல், உடல் பருமனில் இருந்து குழந்தைகளைத் தவிர்க்க வெளியே விளையாடும் பழக்கம் ஏற்படுத்துவது அவசியம்.

ஆரோக்கிய உணவு: குழந்தைகளுக்கு துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கிய உணவினை பழக்கப்படுத்த வேண்டும். சிறு வயதில் இருந்தே உணவு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆரம்ப நிலையில் இருந்தே ஆரோக்கிய பழக்கங்களை பின்பற்ற ஆரம்பிப்பார்கள்’’ என்று ஆலோசனை வழங்கினார் சரும நிபுணர் ஹேமா ஆனந்தி.

தொகுப்பு: பிரியா மோகன்

The post குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: