குழந்தைகளின் நலம்… குடும்பத்தின் நலம்!

நன்றி குங்குமம் தோழி

எந்த நாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா வகை மக்களுக்கும் தெரிந்த ஒன்று… குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.அதேநேரம், தெரியாமல் நடக்கும் விபத்துகளும் அவ்வப்போது நிகழத்தான் செய்கின்றன. அவ்வாறு நிகழும் விபத்துகளில் எந்த மாதிரியான விபத்துகள் குழந்தைகளின் மூளையை பாதிக்கிறது, அதனால் வரும் விளைவுகள் யாவை, அதற்கான இயன்முறை மருத்துவம் என்ன என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம். வாருங்கள்.

மூளை காயம்…

நம் மூளைதான் நமது மொத்த உடலின் அடிநாதம் என்பதால், அதனை பாது காக்க படைக்கப்பட்டதே கடினமான மண்டை ஓடு. இந்த மண்டை ஓட்டையும் மீறி வெகு சில நேரங்களில் மூளையில் அடிபட்டு காயம் ஏற்படலாம். இதனையே மூளை காயம் (Brain Injury) என மருத்துவத்தில் அழைக்கிறோம். மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு செயலுக்கான பகுதி என்பதால், நாம் பேசும் பகுதி அடிபட்டால் நம்மால் பேச முடியாது. சில சூழலில் உயிர் பிரிவது, வாழ்நாள் முழுக்க கண் பார்வை பறிபோவது, சுயநினைவு இல்லாமல் போவது என எது வேண்டுமானாலும் நிகழும் ஆபத்து உள்ளது.

குழந்தைகளின் மூளையும், மண்டை ஓடும்…

கருவாக இருக்கும் போது மண்டை ஓடு நான்கு பகுதிகளாக தனித்தனியே பிரிந்திருக்கும். இவை குழந்தை பிறப்பதற்குள் ஒன்றாக இணைந்து விடும். ஆனால், முழுமையாக இரண்டு இடங்களில் இணைந்திருக்காது. இதுவே நாம் முன் தலையிலும், பின் தலையிலும் காணும் இடைவெளி (உச்சி துடிக்கிறது, உச்சிக்குழி எனச் சொல்வோமே அதுதான்).

எனவே, குழந்தைகளுக்கு முதல் இரண்டு வருடங்களில் மிகவும் மென்மையான மண்டை ஓடுதான் இருக்கும். வளர வளரவே அதன் அடர்த்தி கூடி வரும். அதேபோல கரு உருவாகிய நாள் முதல் குழந்தைகளின் மூளை தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். முதல் ஐந்து வயதிற்குள் அதி தீவிர மூளை வளர்ச்சி நடைபெறும்.

காரணங்கள்…

*அதிக உயரத்திலிருந்து குழந்தை கீழே விழுந்து மண்டை ஓடும், மூளையும் பாதிக்கப்படுவது.

*கழுத்து நிற்காத குழந்தையை யாரேனும் அதிகமாக குலுக்குவதால்.

*யாரேனும் கோபத்தில் குழந்தையை வேகமாக தாக்குவதால்.

*குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும்போது தாறுமாறாக குழந்தையின் தலையையும், கழுத்தையும் வெளியே இழுப்பது.

ஆபத்துக் காரணிகள்…

*மருத்துவருக்கு போதுமான அனுபவம், பொறுமை இல்லாமையால் நிகழும் சுகப்பிரசவம்.

*குழந்தையின் பாதுகாவலர், பெற்றோர் யாவராயினும் அதீத கோபத்தில் குழந்தையை கையாள்வது.

*குழந்தை அடிக்கடி அழும்போது கோபப்பட்டு தூக்குவது, அடிப்பது, தாக்குவது (இவை இந்தியாவில் முன்பு அதிகளவில் நடந்த ஒன்று. ஆனால் இப்போது குறைந்துவிட்டது).

*கார் போன்ற வண்டிகளில் பயணிக்கும்போது முன் இருக்கையின் முன் பகுதியில் (Dash Board) அதிதீவிரமாக இடித்து தலையில் காயம் ஏற்படுவது. இது ஒரு வயதிற்கு மேல் உள்ள
குழந்தைகளுக்கு நடக்கலாம்.

விளைவுகள்…

*குழந்தைகளின் மூளை மென்மையானது என்பதால், மூளைக்கு போகும் ரத்த ஓட்டம் குறைவதால் மூளையின் திசுக்கள் பாதிக்கப்படும். மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலைகளை செய்யும். உதாரணமாக, நாம் எழுந்து நடக்கும் பகுதியில் உள்ள திசுக்கள் பாதிப்படைந்தால் நடப்பதில் பாதிப்பு உண்டாகும்.

*ஆய்வுகளின் படி அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக… நிற்க நடக்க உதவும் தசைகள் முதலிலும், அதற்கு அடுத்தபடியாக பார்வை, செவித்திறன், பேச்சு போன்றவற்றையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

*வாழ்நாள் முழுவதும் மூளையின் பாதிக்கப்பட்ட இடத்தை சரி செய்ய முடியாமலும் ஆகலாம். அல்லது மருத்துவம், உடற்பயிற்சிக்குப் பிறகு குணமடையும் அளவு பாதிப்பு மேலோட்டமாகவும் இருக்கலாம்.

*அடிக்கடி வலிப்பு வரும் வாய்ப்புகளும் இருக்கிறது.

*Shaken Baby Syndrome, Cerebral Palsy, Birth Trauma என பல்வேறு வகையான மூளை காயங்கள், அதன் காரணத்திற்கு ஏற்ப பிரிக்கப்படுகிறது.

*சில குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியும் பின்தங்கி இருக்கும். இதனால் படிப்பதிலும், புரிந்துகொள்வதிலும் சிரமம் உண்டாகி, சராசரி குழந்தைகளை போல இயங்க சிரமப்படுவர்.

தீர்வுகள்…

அலோபதி மருத்துவம்

குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டவுடன் முதலில் முழுவதுமாக குழந்தைகள் நல மருத்துவர் பரிசோதனை செய்து உடனடியாக செய்ய வேண்டிய உயிர் காப்பு மருத்துவத்தை வழங்கி குழந்தையை மீட்பர்.

பின்னர் வலிப்பு, பார்வை, கேட்கும் திறன், மூளையில் ரத்தக் கட்டி என ஏதேனும் பிரச்னை இருந்தால், அதற்கான மருந்துகள் வழங்குவர். அதுவும் என்னென்ன மருந்துகள், எத்தனை
வருடம் எடுக்க வேண்டும் என ஆலோசனை செய்து வழங்குவர்.

இயன்முறை மருத்துவம்

நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் கைகள், கால்கள், முதுகு தசைகளில் பலவீனம் ஏற்படலாம். அல்லது தசை இறுக்கம் ஏற்படலாம். எதுவாக இருந்தாலும் இயல்பாய் இந்த தசைகளால் அசைவுகள் செய்ய இயலாது. இதனால் ஒரு பொருளை எடுப்பது, நடப்பது என அனைத்தும் பாதிக்கப்படும். எனவே இதனை சரி செய்ய இயன்முறை மருத்துவர் குழந்தைகளுக்கென பிரத்யேக உடற்பயிற்சிகள் வழங்குவர்.

மூளையின் பாதிப்புக்கு ஏற்ப குணமடையும். சிலரின் மூளை பாதிப்புக்கு இறுதி வரை உடற்பயிற்சி, பிரத்யேக பாதணி போன்றவை தேவைப்படும். இதனையும் இயன்முறை மருத்துவரின் ஆலோசனை படி செய்து வருவதும், பயன்படுத்துவதும் அவசியமாகும்.மொத்தத்தில் குழந்தைகளின் நலனே குடும்பத்தின் நலன் என்பதால், கவனமாக குழந்தைகளை வளர்த்தெடுப்போம். மேலும், இன்று இந்தியாவில் வன்முறையால் இவ்வாறு குழந்தைகள் பாதிக்கப்படுவது முன்னை விட வெகுவாகவே குறைந்துள்ளது என்பதனால், பயம் கொள்ளாமல் விழிப்புணர்வுடன் மட்டுமே இருத்தல் போதுமானது.

இயன்முறை மருத்துவர்: கோமதி இசைக்கர்

The post குழந்தைகளின் நலம்… குடும்பத்தின் நலம்! appeared first on Dinakaran.

Related Stories: