சென்னை: வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் டி.எம்.கிருஷ்ணா சங்கீத கலாநிதி விருதை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை மறைந்த பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தரப்பு வழக்கறிஞர், டி.எம்.கிருஷ்ணா தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”இந்த விருது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, விருதை தற்போது வழங்க மாட்டோம் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அதனை மியூசிக் அகாடமி செய்யவில்லை. மேலும் இந்த விருதை பெறும் நபர் தகுதியானவரா என்பதை மட்டுமே இந்த நீதிமன்றம் பார்க்கிறது.
அதாவது எம்.எஸ்.சுப்புலட்சுமியை அவமதித்த நபர், அவர் பெயரில் இருக்கும் விருதை பெறுகிறாரா என்பதை மட்டுமே நாங்கள் கருத்தில் கொள்ள உள்ளோம். எனவே இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில் டி.எம்.கிருஷ்ணா தன்னை சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெற்றவர் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் டி.எம்.கிருஷ்ணா, மெட்ராஸ் மியூசிக் அகாடமி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post சங்கீத கலாநிதி விருதை பயன்படுத்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.