×

நாடாளுமன்ற துளிகள்

* 1,065 பெரிய அணைகள் 50-100 ஆண்டு பழையவை
நாட்டில் உள்ள பழமையான 1,065 பெரிய அணைகள் 50 முதல் 100 ஆண்டுகள் வரை பழமையானவை. அதே போல் 224 அணைகள் 100 ஆண்டுகள் பழமையானவை. நாட்டில் மொத்தம் 6,138 அணைகள் உள்ளன. 143 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன என்று ஜல் சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி தெரிவித்தார்.

* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில் தொடங்கப்பட்ட இ-ஷ்ரம் இணையதளத்தில் கடந்த 3 ஆண்டில் 30 கோடி பேர் பதிவு செய்திருப்பதாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

* மக்களவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தர், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் 12 போலி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது நேரடியாக நடவடிக்கை எடுத்தால் கூட்டாட்சி அதிகாரம் மீது கேள்வி எழுகிறது. எனவே 21 போலி பல்கலைக்கழகங்கள் குறித்து மாணவர்கள் மத்தியில் எம்பிக்கள் சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்துகிறேன்’’ என்றார்.

* உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இபிஎப் உயர் பென்ஷன் வழங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஆர்எஸ்பி எம்பி பிரேமசந்திரன் மக்களவையில் வலியுறுத்தினார்.

* ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார இணையமைச்சர் டோகன் சாஹூ கூறுகையில்,’ பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை பிணையில்லா கடன் வழங்கும் திட்டம் அடிப்படையில் டிசம்பர் 8ஆம் தேதி வரை 94.31 லட்சம் முறை ரூ.13,422 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 40.36 லட்சம் முறை வழங்கப்பட்ட கடன்களை தெருவோரப் பயனாளிகள் திருப்பிச் செலுத்தியுள்ளனர்’ என்றார்.

 

The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.

Tags : Parliament Drops ,Parliament ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!