மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, வரும் 22ம் தேதி தெடாங்கி நடக்கவுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள, புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க ஆண்டு இறுதியில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி, புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய கலைகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் ஒன்றிய சுற்றுலாத் துறையும், தமிழ்நாடு சுற்றுலாத் துறையும் இணைந்து கடந்த 1992ம் ஆண்டு முதல், ஆண்டு இறுதியான டிசம்பர் மாதம் தொடங்கி, ஜனவரி மாதம் வரை, இந்திய நாட்டிய விழா கடற்கரை கோயில் அருகே கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்திய நாட்டிய, விழாவை நடத்த தமிழ்நாடு சுற்றுலாத் துறை நிர்வாகம் ஆண்டுதோறும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று நடத்தி வருகிறது.
அதேபோல், இந்தாண்டும் இவ்விழாவானது வரும் 22ம் தேதி தொடங்கி, ஜனவரி 21ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தினமும் பாரம்பரிய கலைகளான மங்கள இசை, கிராமிய கலை, பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி, ராஜஸ்தானி, பொம்மலாட்டம், மோகினியாட்டம், புரவியாட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா 22ம்தேதி தொடக்கம் appeared first on Dinakaran.