×

காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைய 11 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு: பெண்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காஞ்சிபுரம் மாநகராட்சியை விரிவாக்கம் செய்திட திருப்பருத்திகுன்றம், கீழ்க்கதிர்பூர், கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், கருப்படை தட்டடை, திம்மசமுத்திரம், ஏனாத்தூர், வையாவூர், கோனேரிகுப்பம், களியனூர், புத்தேரி உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைக்கும் பணியினை தமிழக அரசு மேற்கொண்டு வருவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், 11 ஊராட்சிகளை‌ சேர்ந்த விவசாயிகள், 100நாள் வேலை திட்ட பணியாளர்கள்‌, விவசாய சங்கத்தினர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டத்தில் ஊராட்சி மக்களிடமும், தலைவர்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் குக்கிராமமாக இருக்கும் 11 ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க தன்னிச்சையாக முடிவெடுத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட துணை செயலாளர் கார்த்தி, மாவட்ட துணை தலைவர் பி.வி.சீனிவாசன், காஞ்சிபுரம் தொகுதி செயலாளர் கமலநாதன் மற்றும் நிர்வாகிகள் சங்கர், ஆறுமுகம் ஸ்டான்லி,லாரன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கை வலியுறுத்தி பேசினார்கள்.

மேலும், 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் அதில் உள்ள 3500 ஏக்கருக்கு மேற்பட்ட விலை நிலங்கள், 1500 விவசாயிகள், 15,000 மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள், 15 ஏரிகள், 5 தாங்கல், 15 குளங்கள், 50க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள், 100 கிலோ மீட்டர் மேல் உள்ள பொதுப்பணித்துறை கால்வாய்கள், அதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் என அனைத்தும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என தீர்மானம் போட்ட பிறகும், உள்ளாட்சி மக்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் எந்த விதமான அறிவிப்பும் செய்யாமல் மாநகராட்சியில் கிராமங்களை இணைக்கும் திட்டம் எவ்வாறு சாத்தியமாகும் எனவும் கேள்வி எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, அங்கு வந்திருந்தவர்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் வருகை தந்து மனு அளித்திட முயன்ற நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அதில் 10 பேரை மட்டும் உள்ளே அனுமதித்த நிலையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்து சென்றனர். மேலும், இந்த முடிவினை மறுபரிசீலனை செய்து திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த கூடும் எனவும் விவசாயிகள் சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

The post காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைய 11 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு: பெண்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Corporation ,Kanchipuram ,District Collector ,Kalaichelvi Mohan ,Tamil Nadu Farmers' Association ,Kavalan Gate ,Kanchipuram District Collector ,panchayats ,Dinakaran ,
× RELATED தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்