×

ஹாங்காங்கிற்கு பெரிய ரக விமானம் இயக்கம் சென்னையில் இருந்து பாங்காங்கிற்கு கூடுதல் விமானம்: அதிகாரிகள் தகவல்

பூந்தமல்லி: சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலாதலமான தாய்லாந்து நாட்டிற்கு சென்னையில் இருந்து நேரடி விமானங்களாக தாய் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் தினசரி நேரடி விமானங்களை இயக்கி வருகின்றன. சுற்றுலா தலமான தாய்லாந்திற்கு அதிக பயணிகள் செல்வதால் இந்த 3 விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் தாய்லாந்து நாட்டிற்கு சென்னையில் இருந்து மற்றொரு புதிய நேரடி விமான சேவையை தாய் லயன் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விமானம் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தற்போது இயங்க தொடங்கியுள்ளது. அதிக விரைவில் இது தினசரி விமானமாக இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தாய் லயன் ஏர்வேஸ் விமானம், பாங்காக்கில் இருந்து புறப்பட்டு அதிகாலை 1 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றடைகிறது. இந்த விமானத்தின் பயண நேரம் 3 மணி 40 நிமிடங்கள். சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு கூடுதலாக விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல, சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனம், வாரத்தில் மூன்று நாட்கள் நேரடி விமான சேவைகளை இயக்கி வருகிறது. ஹாங்காங் தொழில் நகரமாகவும், அதோடு பல்வேறு மேலை நாடுகளுக்கு, இணைப்பு விமான நிலையமாகவும் இருப்பதால் சென்னையில் இருந்து ஹாங்காங் விமானத்தில் அதிக அளவு பயணிகள் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் இப்போது கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஹாங்காங்- சென்னை-ஹாங்காங் வழித்தடத்தில், ஏர் பஸ் 330-300 ரக விமானத்தை இயக்கி வருகிறது. இதில் அதிகபட்சமாக 290 பயணிகள் பயணிக்க முடியும். ஆனால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த விமான நிறுவனம் இப்போது ஏர் பஸ் 350-900 ரக பெரிய விமானங்களை இயக்க தொடங்கியுள்ளது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 350க்கும் அதிகமான பயணிகள் செல்ல முடியும். பயணிகள் கூட்டம் அதிகரிப்பை அடுத்து, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பெரிய ரக விமானங்களை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்க தொடங்கியுள்ளது. இந்த விமான சேவைகள், தினசரி விமானங்களாக விரைவில் மாற இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘சர்வதேச சுற்றுலாதலமான தாய்லாந்துக்கு சென்னையில் இருந்து செல்லும் பயணிகள், அதுபோல் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து தாய்லாந்துக்கு கூடுதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது சென்னை விமான நிலைய சுற்றுலாப் பயணிகள், தொழில்துறையினர் ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது’’ என்று கூறுகின்றனர்.

The post ஹாங்காங்கிற்கு பெரிய ரக விமானம் இயக்கம் சென்னையில் இருந்து பாங்காங்கிற்கு கூடுதல் விமானம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Hong Kong ,Chennai ,Bangkok ,Poonthamalli ,Thai Airlines ,Air Asia ,Indigo Airlines ,Thailand ,
× RELATED சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ்...