×

வேலையை விட்டு நிறுத்தியதால் பெட்ரோல் பங்க்கில் ஊழியர் தீக்குளிப்பு: மாதவரத்தில் பரபரப்பு

மாதவரம்: பெட்ரோல் பங்க்கில் ரூ.1.60 லட்சம் திருடுபோனதாக நாடகம் ஆடிய ஊழியர், வீட்டில் பதுக்கி வைத்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். அவரை வேலையை விட்டு நீக்கியதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இது, மாதவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாதவரம் தபால் பெட்டி அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் அதே பகுதி திரு.வி.க.நகர், 5வது தெருவை சேர்ந்த முருகன்(56), செக்யூரிட்டியாக கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஷிப்டில் இருந்த முருகன் பங்க் உரிமையாளருக்கு போன் செய்து 4 மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க்கிற்கு வந்ததாகவும், அவர்கள் கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.1.60 லட்சம் கலெக்ஷன் பணத்தை எடுத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பங்க் உரிமையாளர் உடனடியாக அங்கு வந்து, மாதவரம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது முருகன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மரம் நபர்கள் வந்து சென்றதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதையடுத்து முருகனை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பணத்தை முருகன் எடுத்து சென்று வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு, மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதாக நாடக மாடியது தெரிந்தது. பின்னர் இரவோடு இரவாக முருகனை வீட்டுக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர் பீரோவில் வைத்திருந்த பணத்தை அவரே திருப்பி கொடுத்ததின் பேரில் பணத்தை பறிமுதல் செய்தனர், பின்னர் உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் முருகனை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் உரிமையாளர் முருகனை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகன் நேற்று காலை பெட்ரோல் பங்க்கிற்கு வந்துள்ளார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெட்ரோல் போடும் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் குழாயை எடுத்து தனக்கு தானே பெட்ரோலை உடம்பில் ஊற்றிக்கொண்டார். பின்னர் சிகரெட் லைட்டர் எடுத்து பற்ற வைத்ததும் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த சக ஊழியர்கள் உடனடியாக பிரத்யேக தீயணைப்பானை கொண்டு முருகன் மீது பிடித்த தீயை அணைத்தனர். இதில் முருகனுக்கு கழுத்து பகுதியில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்று சேர்த்தனர். ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் முருகன் லேசான தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தார். இச் சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post வேலையை விட்டு நிறுத்தியதால் பெட்ரோல் பங்க்கில் ஊழியர் தீக்குளிப்பு: மாதவரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Petrol pump ,Madhavaram ,Madhavaram… ,Dinakaran ,
× RELATED மாதவரத்தில் லிஃப்டில் சிக்கிய 11 பேர் மீட்பு