தண்டையார்பேட்டை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி அப்பு கொடுத்த தகவலின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை எண்ணூர் காசி கோயில் குப்பம் 2வது தெருவை சேர்ந்தவர் ராகவன் (எ) வீரராகவன் (26). பிரபல ரவுடி. இவன் மீது காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஜாமினில் வந்த வீரராகவன், கடந்த வாரம் மீண்டும் அதனை புதுப்பிக்க வழக்கறிஞர் தினேஷுடன் நீதிமன்றத்திற்கு சென்றார்.
அவருக்கு நீதிபதி, ஜாமீன் மறுத்து சிறையிலடைக்க உத்தரவிட்டார். அப்போது ரவுடி வீரராகவன், அவரது நண்பரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள அப்பு (எ) புதூர் அப்பு கொடுத்த 7.6 எம்.எம். கை துப்பாக்கி, 4 தோட்டாக்களை வழக்கறிஞரிடம் கொடுத்து விட்டு சிறைக்கு சென்று விட்டார்.
இது தொடர்பாக சாலிகிராமத்தை சேர்ந்த அப்புவின் வழக்கறிஞர் பழனிமுத்து (37) என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். அவரிடம் அந்த துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டது. அது தொடர்பாக பழனிமுத்து, காசிமேடு காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு. கடந்த அக்டோபர் 19ம் தேதி கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்களையும் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். அதை போலீசார் பெற்று கொண்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள அப்புவிடம் விசாரணை நடத்தி, கார்த்திகேயன் (எ) வீச்சு கார்த்திக் (39) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவன் கொடுத்த தகவலின்பேரில் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த தமிழரசன் (30), மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகியோரை கைது செய்தனர். இதில் தமிழரசன் வீட்டில் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மணிகண்டன்தான் துப்பாக்கி கொடுத்ததாக தமிழரசன் தெரிவித்ததின் பெயரில் மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் முக்கிய குற்றவாளியான சம்பவ செந்திலை தேடி வருகிறார்கள். யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.
The post கைதான பிரபல ரவுடி அப்பு கொடுத்த தகவலின் பேரில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 பேர் கைது நாட்டு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல்: காசிமேடு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.