பள்ளிகொண்டா, டிச.16: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டது. இந்நிலையில், அணைக்கட்டு தொகுதியில் உள்ள இறைவன்காடு, விரிஞ்சிபுரம், செதுவாலை, ஒக்கணாபுரம், பொய்கை சத்தியமங்கலம், சுக்லாந்தாங்கல், நரசிங்கபுரம் அன்பூண்டி, சதுப்பேரி. அப்துல்லாபுரம் ஆகிய ஏரிகளுக்கு போதுமான அளவுக்குநீர் வரத்து இல்லாததால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வந்தனர். மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் இருந்து வந்தது. எனவே பாலாற்றில் செல்லும் தண்ணீரை திருப்பி ஏரிகள் நிரம்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் அணைக்கட்டு எம்எல்ஏவிடம் கடந்தாண்டு கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ அந்தப் பகுதியில் ஆய்வு செய்து எம்எல்ஏ சொந்த செலவில் பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் வருவதற்கு தூர்வாரி கால்வாய்கள் அமைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி பாலாற்றிலிருந்து அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள ஏரிகளான இறைவன்காடு, ஒக்கணாபுரம் ஆகிய ஏரிகளின் கொள்ளளவு முழுவதுமாக நிரம்பி கோடி போனது. அதனையடுத்து நேற்று செதுவாலை ஏரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து நேரில் சென்று பார்வையிட்ட எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் சிறப்பு பூஜைகள் செய்து மலர்கள் தூவி தீபாராதனை காண்பித்து வழிபட்டார். அப்போது, மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பாபு, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், குமரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post செதுவாலை ஏரி நிரம்பி கோடி போனது மலர்தூவி எம்எல்ஏ வரவேற்பு appeared first on Dinakaran.