இறைச்சி கழிவுகளை பாலாற்றில் கொட்டுவதை தடுக்கக்கோரி மனு பள்ளிகொண்டா, ஒடுகத்தூரில் பகுதி சபா கூட்டம்

பள்ளிகொண்டா, டிச.11: பள்ளிகொண்டா பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வார்டு உறுப்பினர்கள் தலைமையில் 3 பேர் கொண்ட ஏரியா சபா குழுவினர் அமைக்கப்பட்டு அந்தந்த வார்டுகளில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2வது வார்டுக்குட்பட்ட ரங்கநாதர் நகர், பத்மாவதி நகரில் கழிவுநீர்க்கால்வாய், தெருவிளக்கு அமைக்கவும், முக்கோட்டி மாரியம்மன் கோயில் செல்லும் வழியில் தரைப்பாலம் அமைக்கவும், மகளிர் மேல் நிலைப்பள்ளி அருகே உள்ள சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்கவும், மயானபூமி செல்லும் வழியில் உடைந்துள்ள கல்வெர்ட்டை அகற்றி புதியதாக அமைக்கவும் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை பாலாற்றில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.

அதேபோல், 16வது வார்டு யாதவர் தெருவில் கழிவுநீர்க்கால்வாய், சாலை வசதி அமைக்கவும், கட்டுப்புடி சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோயில் அருகே உயர் கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த வார்டு மக்கள் மனு கொடுத்தனர். 18வது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியாகுமரன் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வார்டில் மிக முக்கிய நீண்டநாள் கோரிக்கையான கழிவுநீர்க்கால்வாய் கட்டி சாலை அமைத்து தந்ததற்கு நன்றி தெரிவித்தனர். மேலும், வார்டில் டெங்கு கொசு ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்தந்த வார்டில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை வார்டு உறுப்பினர் மற்றும் ஏரியா சபா குழுவினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மனுக்கள் மீது படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செயல் அலுவலர் உமாராணி தெரிவித்தார். இந்நிலையில், 11வது வார்டுக்குட்பட்ட ஏரிக்கரை தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு கூட்டத்தை பற்றி தகவல் தெரியாததால் அதிருப்தியடைந்தனர்.

The post இறைச்சி கழிவுகளை பாலாற்றில் கொட்டுவதை தடுக்கக்கோரி மனு பள்ளிகொண்டா, ஒடுகத்தூரில் பகுதி சபா கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: