புழல்: புளியந்தோப்பு பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த கார்த்திக் (எ) விரல் கார்த்திக் என்பவர், பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய போலீசாரால் போதைப்பொருள் வழக்கில் கடந்த மாதம் கைதாகி, புழல் மத்திய விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறை வளாகத்தில் மற்றொரு கைதியுடன் கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கையால் தாக்கி கொண்டனர்.
இதனை அறிந்த சிறைக் காவலர் பிரபாகரன் அங்கு சென்று கைதிகளை விலக்கிவிட்டு விசாரணை செய்தார். அப்போது கார்த்திக், தகாத வார்த்தைகளால் காவலரை திட்டியும், அவரது சட்டையை கிழித்துள்ளார். மேலும் இடதுபுற கழுத்தில் கையால் தாக்கியதில் காவலர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து சிறை அலுவலர் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், கார்த்திக் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாகவே புழல் சிறையில் கைதிகள் அதிகாரிகளை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்களால் அதிருப்தியில் உறைந்த சிறை அலுவலர்கள் இதுகுறித்து உடனே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறையில் பணியாற்றும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post புழல் சிறையில் காவலரை தாக்கிய கைதி மீது வழக்கு appeared first on Dinakaran.