மனைவி கோபித்து சென்றதால் தாய், தந்தையுடன் வாலிபர் தற்கொலை

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்துள்ள ஏ.வாழவந்தி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50), கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (47). இவர்களது மகன் சுரேந்தர் (25), எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, நாமக்கல்லை அடுத்த வேட்டாம்பாடியைச் சேர்ந்த சினேகாவுடன் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், கோபித்துக்கொண்ட சினேகா, வேட்டாம்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து சுரேந்தர் செல்போன் மூலம் சினேகாவை தொடர்பு கொண்டு, வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால், அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார்.

இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, வீட்டிற்குள் செல்வராஜ், பூங்கொடி, சுரேந்தர் ஆகிய 3 பேரும் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சினேகா தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளார், ஒரே மகன் என்பதால் பெற்றோர் மறுத்துவிட்டதால் கணவனுடன் கோபித்துக் கொண்டு அவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதால், மனமுடைந்த சுரேந்தர் மற்றும் அவரது பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

The post மனைவி கோபித்து சென்றதால் தாய், தந்தையுடன் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: