×

ஆர்.கே. பேட்டையில் 10 செ.மீ. மழை: ராகவநாயுடு குப்பம் பகுதியில் தரைப்பாலம் உடைந்து சேதம்


ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை 10 செ.மீட்டர் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி காணப்படுகிறது. காட்டாற்று வெள்ளம் ஏரி வரவு கால்வாய்களில் வேகமாக பாய்ந்து ஏரிகளுக்கு செல்வதால் கிராமப் பகுதிகளில் உள்ள நீர் ஓடைகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கால் தரைப் பாலங்கள் மூழ்கி கிராம பகுதிகளுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. ராகவ நாயுடு குப்பம் ஊராட்சியில் பழைய அருந்ததி காலனி மற்றும் இந்திரா நகர் செல்லும் கிராமங்களுக்கு இடையில் உள்ள நீர்வரத்து கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் தரைப்பாலம் உடைந்து சேதம் அடைந்துள்ளது.

இதனால் பழைய அருந்ததி காலனி மற்றும் இந்திரா நகர் கிராமங்களுக்கிடையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை கடக்க வசதி இன்று வீடுகளில் முடங்கியுள்ளனர். விவசாய நிலங்களுக்கு கிராம மக்கள் சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நீர் வரத்து கால்வாயில் வெள்ளம் அதிகரித்து கால்வாயின் மூன்று பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் அங்குள்ள விவசாய நிலங்களில் நிரம்பி பயிர்கள் நாசம் அடைந்து வருகிறது. இதேபோல் அம்மையார்குப்பத்தில் கனமழைக்கு கிராமத்தில் உள்ள சிமென்ட் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் தெருவில் சுந்தரவேல் என்பவரின் வீட்டின் சுவர் கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதே போல் பல்வேறு கிராமங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கனமழைக்கு பாதிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போலிவாக்கம் தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியே வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்கின்றனர். இதனால் இந்த நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆர்.கே. பேட்டையில் 10 செ.மீ. மழை: ராகவநாயுடு குப்பம் பகுதியில் தரைப்பாலம் உடைந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Ragavanayudu ,THIRUVALLUR ,Katattu Flood Lake ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து..!!