நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை ஊட்டி – கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே மீண்டும் மழை பெய்து வருகிறது. ஊட்டி – கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். டிசம்பர் மாதம் துவக்கம் முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து விடும். டிசம்பர் முதல் மார்ச் மாதம் துவக்கம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும்.

இந்த சமயங்களில் பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் உறைப்பனி தாக்கம் காணப்படும். இதனால், இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவும். இம்முறை கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் அவ்வப்போது கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், டிசம்பர் மாதம் துவங்கிய நிலையில், மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரம் மழை பெய்தது. புயல் கரையை கடந்த பின்னர், நீலகிரியில் மழை சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், நேற்று மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது.

இந்த மழை நீலகிரி மாவட்டத்தையும் விட்டபாடில்லை. நேற்று காலை முதலே நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடும் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதலே லேசானது முதல் கன மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக ஊட்டி – கோத்தகிரி சாலையில் மைநிலை பகுதியில் சாலையோரத்தில் இருந்த சீகை மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்புத்துறையினர் அந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாக ஊட்டியில் நேற்று கடும் குளிர் நிலவியது. மேலும், எந்நேரமும் சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகளும் குளிரால் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

The post நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை ஊட்டி – கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: