வடலூர் மருவாய் பகுதிகளில் தொடர் கனமழை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர்

கடலூர்: வடலூர் மருவாய் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. வடலூர் அருகே உள்ள மருவாய் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள மழைநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருப்பதால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் ஏரி, குளம் போல் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கின்றது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், சேலம், பெங்களுர் கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கு செல்லும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மழைக் காலத்தின்போது, இந்த தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு மழைநீர் வழிந்தோடி போக்குவரத்து துண்டிப்பு, ஏற்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது பெய்து வரும் மழையிலும் தேசிய நெடுஞ்சாலையில் முன்பு இருப்பதைவிட அதிகளவு மழைநீர் வழிந்தோடாமல் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படாமல் போர்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த கனமழையினால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தேங்கும் நீரால் அப்பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். மேலும் டெங்கு, மலேரியா வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

இது குறித்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் :

இப்பகுதிகளில் கால்வாய்கள் முறையாக தூர்வரப்படாமல் இருந்ததால் மழை நீர் நிரம்பி கழிவுநீருடன் கலந்து வீட்டுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.மேலும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து தெருவில் ஊற்றி வருகின்றோம் மழை இடைவிடாமல் பெய்யும் நிலையில் சிறிது கூட ஒய்வு எடுக்க முடியாமல் மழை நீரை வெளியேற்றி வருவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மழை நீரில் கழிவு நீரும் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மேலும் தொடர்ந்து மழை பெய்தால் முழுமையாக மூழ்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இது போன்று வருடம் வருடம் இது போன்று தான் நடந்து வருவது தொடர்கதையாக உள்ளது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் மனு கொடுத்தும் இது நாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கமால் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வடலூர் மருவாய் பகுதிகளில் தொடர் கனமழை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர் appeared first on Dinakaran.

Related Stories: