ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ; டாஸ்மாக் கடைகளில் தொடரும் வசூல் வேட்டை: வீடியோ வைரலால் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் பீர் மற்றும் பல்வகை மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.20 வாங்கி, தொடர்ந்து வசூல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கடை ஊழியர்களிடம் மதுபிரியர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும்.

இதை மீறி கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஊழியர்கள் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுதலான பணத்தை வசூலித்து வருகின்றனர். இதனால் அதிகாரிகளின் நடவடிக்கை எவ்வித பயனும் இன்றி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களுக்கு கூடுதல் விலை வைத்து ஊழியர்கள் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நேற்று பீர் வாங்க வந்திருந்த மதுபிரியரிடம் கூடுதலாக 20 ரூபாய் தரும்படி ஊழியர் மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார். இதுதொடர்பாக மதுபிரியருக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொள்ளும் காட்சிகளை பலர் செல்போனில் வீடியோவாக படம்பிடித்து, பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுபோன்ற ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மதுபிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

The post ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ; டாஸ்மாக் கடைகளில் தொடரும் வசூல் வேட்டை: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: