×

சிறை கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் துணை ஜெயிலர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

பூந்தமல்லி, டிச. 13: பூந்தமல்லி சிறையில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்த விவகாரத்தில் துணை ஜெயிலர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் தனி கிளை சிறை உள்ளது. இங்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பூந்தமல்லி கிளை சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையிலும் சிறை வார்டன் மற்றும் காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கைதிகளின் அறைகளிலிருந்து 5 செல்போன், கஞ்சா மற்றும் அதிக அளவில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் சிறைத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். கடுமையான பாதுகாப்பும் கெடுபிடிகளும் உள்ள சிறைக்குள் செல்போன்கள் கஞ்சா மற்றும் பணம் எப்படி வந்தது என்று பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பூந்தமல்லியில் உள்ள சிறை வார்டன்கள், ஜெயிலர்கள் மற்றும் போலீசாரிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்தில் போலீசார் உடந்தையாக இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, பூந்தமல்லி தனி கிளை சிறை துணை ஜெயிலர் செல்வராஜ், உதவி ஜெய்லர் ஜேம்ஸ் பிரிட்டோ, தலைமை காவலர் உதயகுமார், மாரி செல்வம் உள்ளிட்ட 5 பேரை சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு முக்கியமான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் செல்போன்கள் பணம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதன் மூலம் சிறைக்குள் ஏதாவது சதி திட்டம் தீட்டி செயல்படுத்த இவை கொண்டு வரப்பட்டதா எனவும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

The post சிறை கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் துணை ஜெயிலர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Poonamalli ,Karaiyansavadi ,Armstrong ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் மின், இயந்திர அமைப்பு பணிக்கு ரூ.168 கோடியில் ஒப்பந்தம்