×

கனமழை காரணமாக பூண்டி, பிச்சாட்டூர், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றம்: கொசஸ்தலை, ஆரணி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை, டிச.13: கனமழை காரணமாக பூண்டி, பிச்சாட்டூர், கிருண்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை, ஆரணி ஆற்றங்களை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும்.

இதன் முழுகொள்ளளவு 32.31 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரம் படி நீர்இருப்பு 34.34 அடியாகவும் கொள்ளவு 29.31 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டியில் நீர்வரத்து நேற்றைய நிலவரம் 3,500 கனஅடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள நீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று மாலை 5,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

இதேபோல்ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் நிரம்பியது. இந்த ஏரியின் கொள்ளளவு 281 மில்லியன் கன அடியாகும். 280 மில்லியன் கன அடி நீர் இருப்பு வந்தால் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது 280.80 மில்லியன் கன அடி நீர் இருப்பு வந்ததால், ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்த்தேக்கத்தில் இருந்து 4 மதகுகளின் வழியாக காலை 11 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், பின்னர் பிற்பகல் 3 மணியளவில் கூடுதலாக 4000 கன அடி திறக்கப்பட்டு மொத்தம் மொத்தம் 5000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் மேலும் கூடுதலாக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு மொத்தம் 6 ஆயிரம் அடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரின் அளவு மேலும் உயர்த்தப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் மழையின் காரணமாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி ஆரணியாற்றின் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. எனவே ஆரணியாற்றின் கரையோரத்தில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, தாராட்சி, கீழ் சிட்ரபாக்கம், மேல்சிட்ரபாக்கம், பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள நெல்வாய், மங்களம், கீழ் முதலம்பேடு மற்றும் பொன்னேரி வட்டத்தில் ஏலியம்பேடு, சின்ன காவணம், பெரிய காவணம், லட்சுமிபுறம் மற்றும் ஊத்துக்கோட்டை வலதுபுறத்தில் அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம் மற்றும் பொன்னேரி வட்டம், ராள்ளபாடி, ஆரணி, புதுவாயல் உள்ளிட்ட 72 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல சம்மந்தப்பட்ட விஏஒக்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் கடந்த 1ம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 2000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post கனமழை காரணமாக பூண்டி, பிச்சாட்டூர், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றம்: கொசஸ்தலை, ஆரணி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bundi, Bichatur, ,Krishnapuram reservoirs ,Kosasthalai ,Arani riverside ,Chennai ,Arani Rivers ,Poondi ,Pichatur ,Kirunapuram ,Sathyamurthy Sagar Reservoir ,Poondi, ,Bichatur, ,Krishnapuram Reservoir ,Dinakaran ,
× RELATED கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு..!!