பொன்னேரி, டிச. 12: பொன்னேரி அடுத்த பழவேற்காடு அடுத்த கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் மர்ம படகு ஒன்று கரை நேற்று மாலை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோரைக்குப்பம் கிராம மீனவர்கள் வழக்கம் போல நேற்று மீன்பிடி தொழிலுக்கு சென்ற நிலையில் மூங்கிலால் செய்யப்பட்ட படகு ஒன்று கடல் அலையில் அடித்து கொண்டு கரை ஒதுங்கியது. நாட்டுப்படகு, விசைப்படகுகள் மட்டுமே தமிழ்நாட்டின் கடலோர மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தி வரும் நிலையில், வித்தியாசமான படகை கண்ட மீனவர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலோர காவல் படையினர், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் படகை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். ஆட்கள் யாருமின்றி கேட்பாரற்று கரை ஒதுங்கிய படகு, மியான்மர் நாட்டில் பயன்படுத்துவது போல உள்ளதால் படகில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் வந்தார்களா? அல்லது புயல் காற்றில் படகு அடித்து வரபட்டதா? சதி செயலில் ஈடுபட யாரேனும் கடல் வழியே ஊடுருவி உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் நாகை மாவட்டத்தில் இதே போன்ற படகு கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
The post பழவேற்காடு அருகே கரை ஒதுங்கிய மூங்கிலால் செய்யப்பட்ட மர்ம படகு: மியான்மர் நாட்டின் படகா? கடலோர காவல் படையினர் விசாரணை appeared first on Dinakaran.