திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ: 7 நோயாளிகள் கருகி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிறுமி உட்பட 7 நோயாளிகள் உயிரிழந்தனர். திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். 4 மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் சிகிச்சைக்கு உடனிருந்தவர்கள், மருத்துவ பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு மாரியம்மாள் (50), இவரது மகன் மணிமுருகன் (28), தேனியை சேர்ந்த சுருளி (50), அவரது மனைவி சுப்புலட்சுமி (45), திண்டுக்கல் என்ஜிஓ காலனி ராஜசேகர் (40), இவரது மகள் கோபிகா (6) உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். லிப்டில் மேலும் சிலர் சிக்கி உயிருக்கு போராடினர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளே சிக்கியவர்களை மீட்பதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மருத்துவமனையின் மற்றோரு லிப்டில் சிக்கியிருந்த சிறுவன் உட்பட 8 பேரை தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு பின்பே சேர்க்கப்பட்டவர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது தெரியும்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் விபத்து நடந்த மருத்துவமனைக்கு விரைந்தனர். தீ விபத்து தொடர்பான விவரங்களை கேட்டறிந்த அவர்கள், அங்கிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் நலம் விசாரித்தனர். பின்னர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் பூங்கொடி, எஸ்பி பிரதீப் ஆகியோரும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீ விபத்தால் அந்த பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

* எங்கிருந்து தீ பரவியது?
திண்டுக்கல் தனியார் மருத்துமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து பரவியதே காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

* ‘லிப்ட்டை உடைத்து மீட்டோம்’
மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை அதிகாரி கணேசன் கூறும்போது, ‘‘முதல் மாடியில் பிடித்த தீ, மேலே உள்ள 3 மாடிகளுக்கும் விறுவிறுவென பரவியது. படுக்கை நோயாளிகள் உட்பட 32 பேரை உடனடியாக மீட்டு தரைத்தளத்திற்கு கொண்டு வந்ேதாம். அப்போது, லிப்டில் சிலர் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. ஒரு லிப்டில் குழந்தைகள் உட்பட 8 பேர் சிக்கியிருந்தனர். லிப்ட்டை உடைத்து அவர்களை வெளியே கொண்டு வந்ேதாம்’’ என்றார்.

* 3 பேர் கவலைக்கிடம்
தீவிபத்து குறித்து திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி கூறுகையில், ‘‘தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்களில் 23 பேர் நல்ல நிலையில் உள்ளனர். 3 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த காரணங்கள் முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும். மருத்துவமனையில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை கொடுத்த பின்னரே தகவல்கள் தெரிவிக்கப்படும். மேலும், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தீ விபத்து ஏற்பட்டதில் பதற்றமடைந்து ஓடியதில் மூச்சு திணறியும், 23 பேருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் உதவிக்காக மதுரையில் மருத்துவக்குழுவினர் திண்டுக்கல் வந்துள்ளனர்’’ என்றார்.

The post திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ: 7 நோயாளிகள் கருகி பலி appeared first on Dinakaran.

Related Stories: