தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க பரிசீலனை: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சம் மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்போது முக்கிய நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று பணிபுரிந்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் சுமார் 7 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் இவ்வாண்டு தொடங்கப்பட்ட தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தொழில் நிறுவனங்களில் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள தொழிலுக்கு ஏற்ற திறன் பெற்ற பணியாளர்கள் தேவை உள்ளதாகவும், அவர்களுக்கு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி அளிப்பது குறித்தும் தெரிவித்தனர். ஏற்கனவே திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தொழில் நிறுவனத்தாருடன் சந்தித்து உரையாடி உள்ளோம். அவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் முறைகள் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியின் போது, உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆப்ரகாம், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் விஜயகுமார், (ஓய்வு) பேராசிரியர் பெருமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க பரிசீலனை: அமைச்சர் கோவி.செழியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: