காலாப்பட்டு : நண்பனின் தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கழுத்தறுத்து கொலை செய்தோம் என்று பீட்சா கடை ஊழியர் கொலையில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மரக்காயர் தெருவை சேர்ந்தவர் சிவா (23). இவர் புதுச்சேரியில் உள்ள பீட்சா கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள புதுகுப்பம் கடற்கரை பகுதியில் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரோ கொலை செய்து வீசியுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மனைவி நஸ்ரின் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சிவாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஷேக் இஸ்மாயில் மகன் அப்துல் சலாம் (19), நூர் முகமது மகன் அமீஸ் (19) ஆகியோர் சிவாவை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டம் கடப்பேரிக்குப்பம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் பதுங்கி இருந்த அப்துல் சலாம், அமீஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அப்துல் சலாம் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: சிவா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பனின் தங்கையான 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த தனது நண்பன் அவரை கண்டித்தபோது திமிராக பேசியுள்ளார். இதையடுத்து தனது நண்பன் என்னிடம் வந்து நடந்த சம்பவத்தை கூறி சிவாவை கண்டிக்குமாறு கூறினார்.
ஆகையால் நானும் தனது மற்ற நண்பர்களும் சேர்ந்து சிவாவை கண்டித்தோம். அப்போது எனக்கும், சிவாவுக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் எங்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. ஆகையால் சிவாவை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். அதன்படி அவரை சமாதானம் பேசுவதாக வரவழைத்து தீர்த்து கட்ட நானும் எனது நண்பன் அமீஸ் என்பவரும் முடிவு செய்தோம்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (6ம்தேதி) திட்டத்தின் படி சமாதானம் பேசுவதற்காக சிவாவுக்கு போன் செய்து சமாதானம் பேசினேன். பிறகு இதனை கொண்டாட வேண்டும் என்று சிவா மது பார்ட்டி வைக்க முடிவு செய்து அவர் வேலை செய்த இடத்தில் குழந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் தேவை என்று கூறி ரூ.3 ஆயிரம் கடன் வாங்கி வந்து மதுபார்ட்டி வைத்தார்.
இதையடுத்து சிவா, அமீஸ் ஆகியோருடன் கோட்டகுப்பம் நகராட்சி அருகே உள்ள குளக்கரையில் அமர்ந்து மது அருந்தினோம். பிறகு மது போதை அதிகமானதும் தங்கள் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் தனது தம்பியை வரவழைத்து மீண்டும் மதுபாட்டில் வாங்கிக்கொண்டு சிவா பைக்கில் கூனிமேடு கடற்கரையோரம் உள்ள தைக்கால் அருகே சென்று மீண்டும் மது அருந்தினோம்.
அப்போது திட்டப்படி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவாவின் கழுத்தை அறுத்தும் வயிற்று பகுதியில் குத்தியும் கொலை செய்து சடலத்தை கடலில் வீசிவிட்டு நானும், அமீசும் சிவாவின் பைக்கை எடுத்துக்கொண்டு வந்து விட்டோம்.
பிறகு அவரது பைக் மற்றும் கத்தி ஆகியவற்றை கோட்டக்குப்பம் நகராட்சி அருகே உள்ள குளத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டோம். பிறகு சிவாவை தீர்த்து கட்டிய தகவலை தங்களது வீட்டில் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தினோம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் எங்கள் இருவரையும் கடப்பேரிக்குப்பம் பகுதியில் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை கேள்விப்பட்டு குவைத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனது தந்தை ஷேக் இஸ்மாயில் கோட்டக்குப்பம் வந்துவிட்டார்.
கொலை செய்யப்பட்ட சிவாவின் உடல் கரை ஒதுங்கி வெளியே வந்து மூன்று நாட்களுக்கு பிறகு தான் போலீஸ் மற்றும் பொதுமக்களுக்கு தெரியவந்தது. இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக கூறினர்.
இதையடுத்து அப்துல் சலாம், அமீஸ் மற்றும் மது வாங்குவதற்கு கொலையாளிகளுக்கு பணம் கொடுத்த 16 வயது சிறுவன், கொலையாளிகளுக்கு மது பாட்டில்கள் வாங்கி கொடுத்த அமிஸ் தம்பியான 16 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கொலைக்கு பயன்படுத்திய கத்தி, சிவா பைக், மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் விழுப்புரம் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். பிறகு அப்துல் சலாம், அமீஸ் ஆகியோரை கடலூர் மத்திய சிறையிலும், இரண்டு சிறுவர்களை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் போலீசார் அடைத்தனர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சிவாவை கொலை செய்துவிட்டு அப்துல் சலாம் மற்றும் அவரது நண்பர்கள் தங்களது வீட்டின் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். மேலும், சிவாவின் தலையை துண்டித்து காவல் நிலையம் முன் வைத்து கெத்து காட்ட நினைத்துள்ளனர்.
கத்தி சரிவர வெட்டாததால் தலையை துண்டிக்க முடியாமல் போனது. இதனால் அவர்களின் கெத்து காட்ட நினைத்த கனவும் பலிக்காமல் போனதாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பயங்கர செயலை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post பீட்சா கடை ஊழியர் கொலையில் சிறுவன் உட்பட 4 பேர் கைது நண்பனின் தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கழுத்தறுத்து கொன்றோம் appeared first on Dinakaran.