அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாதபோது நர்ஸ், ஊழியர்கள் பிரசவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தை இறந்த பரிதாபம்: மருத்துவமனை வாயிற் கதவை மூடி உறவினர்கள் போராட்டம்; கல்பாக்கம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (37). கார் டிரைவரான இவருக்கும் சுஜாதா (33) என்பவருக்கும் திருமணமாகி ஏற்கெனவே 8 வயதில் பெண் குழந்தை உள்ளநிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு சுஜாதா மீண்டும் கர்ப்பம் தரித்தார். நிறை மாத கர்ப்பிணியான சுஜாதாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பிரசவ சிகிச்சைக்காக சதுரங்கப்பட்டினத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில், 2 செவிலியர்களும் மற்றும் மருத்துவமனை உதவியாளர்கள் இணைந்து சுஜாதாவிற்கு பிரசவம் பார்க்க இரவு முழுதும் முயற்சித்துள்ளனர். இந்நிலையில், சுஜாதாவிற்கு அதிக மூச்சு திணறல் ஏற்படவே பயந்துபோன செவிலியர்கள் உடனடியாக திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சுஜாதாவை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே வயிற்றில் இறந்து விட்டதாகவும், இப்படியே விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் எனக் கூறவே உடனடியாக சுஜாதாவிற்கு பிரசவம் பார்த்து, இறந்த நிலையில் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

இந்நிலையில், சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மற்றும், ஊழியர்கள் பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்துப் போனது என்பதால் ஆத்திரமடைந்த சுஜாதாவின் கணவர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையின் வாயிற் கதவை இழுத்து முடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மருத்துவ அதிகாரிகள் மற்றும் சதுரங்கப்பட்டினம் போலீசார் போராட்டதில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தினர், அப்போது சம்மந்தப்பட்ட செவிலியர்களை உடனடியாக பணி மாற்றம் செய்கிறோம் என்றனர்.

ஆனால் போராட்டம் நடத்தியவர்கள் அதை ஏற்க மறுத்து, கண் துடைப்புக்காக இடமாற்றம் செய்வது மட்டும் தீர்வாகாது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க சம்மந்தப்பட்ட செவிலியர்களையும், ஊழியர்களையும் சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்றனர். இது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சுஜாதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், பொதுவாக இந்த மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை, பிரசவம் பார்க்க மருத்துவர்கள் பணியில் இல்லாத நேரத்தில் கர்ப்பிணி பெண்ணான சுஜாதாவை ஏன் இங்கு அட்மிட் செய்தனர். இதையெல்லாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாதது தான், இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாகிறது. சுஜாதாவிற்கு பிரசவம் பார்த்த சம்மந்தப்பட்ட செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை சஸ்பென்ட் செய்யாவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவது மட்டுமின்றி, இந்த மருத்துவமனையை கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

The post அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாதபோது நர்ஸ், ஊழியர்கள் பிரசவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தை இறந்த பரிதாபம்: மருத்துவமனை வாயிற் கதவை மூடி உறவினர்கள் போராட்டம்; கல்பாக்கம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: