பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நோட்டீஸை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் பிரேமானந்தா கைது செய்யப்பட்ட பின், கடந்த 1994ம் ஆண்டு அவரது ஆசிரமத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 76 லட்சம் ரூபாய்க்கான நிரந்தர வைப்பீடு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், பிரேமானந்தாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து, சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக 2005ம் ஆண்டு பிரேமானந்தா அறக்கட்டளைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசை எதிர்த்து பிரேமானந்தா அறக்கட்டளை சார்பில் கடந்த 2007ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா 2011ம் ஆண்டு சிறையில் இறந்து விட்டார்.

இந்நிலையில் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றார். ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த வழக்கில் கடந்த 2006ம் ஆண்டே அறக்கட்டளை தரப்பினர் நேரில் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து, விசாரணையிலும் பங்கெடுத்துள்ளனர்.

சட்ட விதிகளைப் பின்பற்றியே நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், பிரேமானந்தா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீதான விசாரணையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நோட்டீஸை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: