மின் மோட்டார்வயர் திருட்டால் 8 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு

 

கடையம்,டிச.9: கடையம் பெரும்பத்து ஊராட்சியில் லில்லிவனம், மேலமாதாபுரம், ஆசிர்வாதபுரம், காணவூர், ஸ்டாலின்நகர், அயோத்திமாநகர், பால்வண்ணநாதபுரம் மற்றும் சியோன்நகர் ஆகிய 8 குக்கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வரும் குடிநீர் கிணறு ராமநதி ஆற்றங்கரையோரத்தில் சூட்சமுடையார் கோயில் உள்ளது. இதில் 5 எச்பி மின் மோட்டார் கடந்த 6ம் தேதி பழுது ஏற்பட்டது. இதையடுத்து பழுது நீக்கம் செய்வதற்காக மோட்டாரை ஊராட்சி ஊழியர்கள் கழற்றினர். அன்றிரவு மோட்டார் இயங்கவில்லை என்பதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் யாரோ ரூ.10 ஆயிரம் மதிப்பில் 80 மீட்டர் அளவிலான மின்சார வயரை திருடி சென்றுவிட்டனர்.

நேற்று மோட்டாரை மாட்டுவதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வயர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் கடையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வயர் திருட்டால் நேற்று முன்தினம் 8 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து நேற்று ஊராட்சி தலைவர் ஏற்பாட்டின் பேரில் புதிதாக மின்வயர் பொருத்தி மோட்டார் இயக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

The post மின் மோட்டார்வயர் திருட்டால் 8 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: