ஏல நகைகளை வாங்கலாம் எனக்கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் தலைமறைவு

சிவகங்கை, டிச.17: நகை ஏலம் நடப்பதாக கூறி ரூ.5 லட்சத்தை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் வண்டியூரை சேர்ந்தவர்கள் ராஜா, முத்துமாரி(42) தம்பதியினர். இவர்களது மகன் ஸ்ரீஹரி(22). கொத்தனார். இவருக்கு ஒத்தக்கடை பகுதியில் டாஸ்மாக் பாரில் காரைக்குடியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். சங்கர் வங்கியில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 23பவுன் நகை ஏலம் விட உள்ளதாகவும், அதை ஏலம் எடுக்க ரூ.5லட்சம் வேண்டும். பணம் இருந்தால் 23பவுன் நகையையும் வாங்கி விடலாம். இதனால் கூடுதல் லாபம் கிடைக்கும் என ஸ்ரீஹரியிடம், சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து முத்துமாரியிடம், ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார். முத்துமாரி தனது நகைகளை அடகு வைத்து ரூ.5லட்சம் தயார் செய்துள்ளார்.

பணத்துடன் ஸ்ரீஹரி மற்றும் முத்துமாரி இருவரும் நேற்று பகலில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்துள்ளனர். அலுவலக மேல் மாடியில் நகை ஏலம் நடப்பதாக தெரிவித்து சங்கர் பணத்தை வாங்கி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகமடைந்த ஸ்ரீஹரி விசாரித்ததில் நகை ஏலம் எதுவும் நடக்கவில்லை என்ற விபரம் தெரியவந்தது.

நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததால், அதை சாதகமாக பயன்படுத்தி சங்கர் கைவரிசை காட்டியுள்ளார். இதுபற்றி சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேசனில் முத்துமாரி புகார் அளித்தார். வழக்குப்பதிந்து தலைமறைவான சங்கரை போலீசார் தேடி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திலேயே நகை ஏலம் நடைபெற உள்ளதாக கூறி பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஏல நகைகளை வாங்கலாம் எனக்கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் தலைமறைவு appeared first on Dinakaran.

Related Stories: