×

ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் ஒரு பெண்ணுக்கு கூட அமைச்சர் பதவியில்லை: பெண்கள் துறையை முதல்வரே வைத்திருக்க காரணமென்ன?

ராஞ்சி: ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் ஒரு பெண்ணுக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில், பெண்கள் துறையை முதல்வரே வைத்திருப்பதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியை பிடித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஹேமந்த் சோரனின் புதிய அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. முந்தைய ஆட்சி காலத்தில் மாநில பெண்கள் மேம்பாட்டுத் துறையை ஜோபா மாஞ்சி, பேபி தேவி ஆகியோர் வகித்தனர். ஆனால் தற்போது இந்தத் துறையை முதலமைச்சர் ஹேமந்த் சோரனே கையாளுவார்.

புதிய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துறை ஒதுக்கீட்டில், ஏன் ஹேமந்த் சோரன் இந்த முடிவை எடுத்தார்? என்ற கேள்வி எழுகிறது. மாநிலம் புதியதாக உருவாகி 24 ஆண்டுகள் ஆன நிலையில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பொறுப்பை பெண்ணுக்கு வழங்காதது இதுவே முதல் முறையாகும். பாஜகவின் பாபுலால் மராண்டி ஆட்சிக் காலத்தில், ஜோபா மாஞ்சிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டில், பாஜக அரசு அமைந்த போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பு லூயிஸ் மராண்டிக்கு வழங்கப்பட்டது. ஜார்கண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக அமைச்சகத்தின் கீழ் 30க்கும் மேற்பட்ட திட்டங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மிக முக்கியமானது மாயா திட்டம் ஆகும். சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில், இந்த திட்டம்தான் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 50 வயது வரையிலான அனைத்து பெண்களுக்கும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இனிமேல் மாதம் 2500 ரூபாய் பெண்களின் கணக்கில் வரும் என்று கூறப்படுகிறது. மீண்டும் ஆட்சியமைய பெண்களின் வாக்கு மிக முக்கியமானதாக இருந்ததால், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை தனது பொறுப்பிலேயே ஹேமந்த் சோரன் வைத்துக் கொண்டதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறினர்.

The post ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் ஒரு பெண்ணுக்கு கூட அமைச்சர் பதவியில்லை: பெண்கள் துறையை முதல்வரே வைத்திருக்க காரணமென்ன? appeared first on Dinakaran.

Tags : Hemand Soran ,Ranchi ,Chief Minister ,Hemant Soran ,Legislative Council ,Jharkhand ,Dinakaran ,
× RELATED ஜெய் ஹிந்த், நீங்கள் எப்படி...