அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: கனமழை பெய்தால் நோயாளிகள் அவதி

மண்டபம்: மண்டபம் பேரூராட்சி மற்றும் அருகேயுள்ள மரைக்காயர் பட்டிணம்,வேதாளை ஆகிய ஊராட்சிகளில் சேர்த்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.அதுபோல வெளியூர்களில் இருந்து மண்டபம் கடற்கரைக்கு மீன்பிடி தொழிலுக்காக தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வந்து செல்லும் பகுதியாகும் திகழ்ந்து வருகிறது. அதுபோல ரயில் நிலையம் அமைந்திருப்பதால் பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் மண்டபம் பகுதி எந்த நேரத்திலும் பேருந்து நிறுத்தம் பகுதி, வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள நகர் பகுதிபோல கடற்கரைப் பகுதியில் பொதுமக்களும் மற்றும் மீனவர்களின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படும்.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதி ஒரு முக்கிய பகுதியாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் மண்டபம் நகர் பகுதியில் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இந்த பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் மீனவர்களும், அதுபோல தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் இருப்பதால் ராமேஸ்வரத்துக்கு செல்லும் சுற்றுலாவாசிகளும் பக்தர்களும் ஏதேனும் திடீரென முடியாமல் போய்விட்டாலும், மற்ற எந்த நோயுக்கும் சிகிச்சைக்காக அதிகமானோர் வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. ஆதலால் கனமழை பெய்யும் போது மழை நீர்களும் தேக்கமடைந்து மருத்துவமனை தத்தளிக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. ஆதலால் சுகாதார நிலையத்தை மேம்படுத்துவதற்காக அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள பகுதி சாலைகள் மற்றும் மணல் பரப்பை விட பள்ளத்தில் அமைந்துள்ளது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்து வந்தால் மழை நீர் சாலைகளில் இருந்து வழிந்தோடி மருத்துவமனை வளாகத்தில் நிரம்பிவிடும். இதனால் மருத்துவமனைக்கு செல்லும் பொது மக்களும் சிகிச்சை பெற்று ஒரு நோயாளிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். அதுபோல அங்கு தங்கி சிகிச்சை பெரும் நோயாளிகளும் வெளியில செல்ல முடியாமல் தவிக்கும் நாட்களும் நடந்துள்ளது. அதுபோல பள்ளி மருத்துவமனை வளாகம் மழை நீர் நிரம்பிய தத்தளிக்கும் சூழ்நிலையும் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் மண்டபத்தில் அமைந்திருப்பது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்பதால், பராமரிப்பு நிதிகளும் அரசு அதிகமாக வழங்க முடியாது. ஆதலால் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் அதிகமான நிதிகள் வரும் போது, அப்போது மருத்துவமனையை பராமரிக்கவும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள முடியும். மண்டபத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் அதிகளவில் இல்லை. அதுபோல அனைத்து பிரிவு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை. இதனால் இங்கு சிறிய மற்றும் பெரிய அளவில் நோய்களுக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள்,மீனவர்கள் மற்றும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

எந்த சிகிச்சைக்கு வந்தாலும் உடனடியாக மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் சில நேரங்களில் அதிக நேரம் சென்று சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் சேதங்களும் ஏற்படுகின்றன. ஏழை எளிய வசதி இல்லாத மக்களும், மீனவ மக்களும் மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு வந்து தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மண்டபம் பகுதியில் வாகனங்களில் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது.

அது போல தீ விபத்து மற்றும் கொலை போன்ற நிகழ்வுகளும் மற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கடலில் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளால் ஏற்படும் உயிர் சேதங்களில் பாதிக்கப்பட்ட உடல்களை உடல் கூறு பரிசோதனை செய்வதற்கு மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் கூறு பரிசோதனை மையம் கிடையாது.

இதனால் 45 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால் உறவினர்களும்,பொதுமக்களும் மருத்துவமனைக்கு சென்று பொருளாதார ரீதியாகவும் தங்க வசதிகள் இல்லாமல், மருத்துவமனை வளாகத்தில் தங்கி கொசுக்களின் தாக்குதலில் சிக்கி இரவுகள் முழுவதும் பல இன்னல்களில் அவதிப்பட்டு வருகின்றனர். அதுபோல பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால் மண்டபம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். கூடுதலான மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். உடல் கூறு பரிசோதனை மையம் உள்பட அனைத்து மருத்துவ அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: கனமழை பெய்தால் நோயாளிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: