நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்படும்

*ஆணையர் ஸ்டேன்லி பாபு பேட்டி

ஊட்டி : நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகளை வேகப்படுத்தப்படும் என ஊட்டி நகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள ஸ்டேன்லி பாபு தெரிவித்தார். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுமார் 1700-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. இந்த மார்க்கெட் கடந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இந்த மார்க்கெட்டை மேம்படுத்துவதுடன், பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கடைகள் கட்டும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துவக்கியது.

முதற்கட்டமாக காபி அவுஸ் பகுதிக்கு அருகே பன்றி இறைச்சி கடைகள் முதல் எலக்ட்ரிக்கல் கடை வரை 190 பழுதடைந்த கடைகள் இடித்து விட்டு தரைத்தளத்தில் 126 நான்கு சக்கர வாகனங்கள், 163 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் பார்க்கிங் தளமும், முதல் தளத்தில் 240 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக ஏடிசி பகுதியில் உள்ள பார்க்கிங் தளங்களில் முதற்கட்டமாக 100 கடைகள் கட்டப்பட்டன.

மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் இங்கு இடம் மாற்றப்பட்டு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்டமாக இடிக்கப்பட்ட கடைகள் இருந்த இடத்தில் புதிய கடைகள் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மேலும், இரண்டாம் கட்டமாக கடைகள் இடிக்கும் பணிக்காக தற்போது மார்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செயவதற்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

முதற்கட்ட கட்டுமான பணிகள் தற்போது மந்தமாக நடப்பதாக சிலர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், முதற்கட்ட கட்டுமான பணிகளை வேகப்படுத்துமாறு நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கான்டரக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்டமாக கடைகள் கட்டும் பணிக்காக கடைகளை இடிக்கவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால், விரைவில் அந்த கடைகளையும் இடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ஸ்டேன்லி பாபு கூறுகையில், ‘‘ஊட்டி நகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்று நான்கு நாட்களே ஆகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும், நீலகிரி மாவட்டம் வேறுபட்டு உள்ளது. எனவே, இந்த மாவட்டத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

முதற்கட்டமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கட்டுமான பணிகளை வேகப்படுத்தி, விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இரண்டாம் கட்டமாக கட்டப்படவுள்ள கட்டுமான பணிக்காக தற்போது அங்கு கடைகள் வைத்துள்ள 38 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனையும் இடித்துவிட்டு கட்டுமான பணிகள் விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்படும் appeared first on Dinakaran.

Related Stories: