விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் 329 கி.மீ. சாலைகள் சேதம்

*டிசம்பருக்குள் முழுமையாக சீரமைக்க முடிவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக 329 கி.மீ. தூர சாலைகள் சேதம் அடைந்துள்ளன. டிசம்பருக்குள் முழுமையாக சீரமைக்க அந்த துறை அமைச்சர், அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக பெரிதும் விழுப்புரம் மாவட்டம் பாதிக்கப்பட்டது.

மேலும் சாத்தனூர் அணை திறக்கப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் பெருகி வந்த வெள்ளம் கரையோர பகுதிகளில் பரந்தோடி பொதுமக்களை பெரிதும் பாதித்தது மட்டுமில்லாமல், சாலைகள் அறுத்தோடி வழிந்தும், மூழ்கடித்தும் சென்று சாலைகளை சேதப்படுத்தியது. இதில் விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மூலம், மாநில நெடுஞ்சாலைகள் 388 கி.மீ., மாவட்ட முக்கிய சாலைகள் 217 கி.மீ., இதர மாவட்ட சாலைகள் 1354 கி.மீ. மற்றும் கரும்பு அபிவிருத்தி சாலைகள் 122 கி.மீ. பராமரிக்கப்படுகிறது.

மேற்காணும் சாலைகளில், மாநில நெடுஞ்சாலைகள் 105.30 கி.மீ., மாவட்ட முக்கிய சாலைகள் 45.60 கி.மீ., இதர மாவட்ட சாலைகள் 178.15 கி.மீ. ஆகியன சேதமடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறை- முகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை முதன்மை கூடுதல் செயலாளர் செல்வராஜ், தலைமை பொறியாளர் சந்தியகிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர் உத்தண்டி ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்ட அரசூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் சுற்றியுள்ள பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை களஆய்வு செய்தனர்.

இச்சாலை பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உத்தரவின்படி இதர கோட்டங்களிலிருந்து சாலைப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பணிக்கு விருத்தாசலம் கோட்டத்திலிருந்து 30 சாலைப் பணியாளர்களும், அரியலூர் கோட்டத்திலிருந்து 3 திறன்மிகு உதவிளர்கள், 45 சாலைப் பணியாளர்களும், பெரம்பலூர் கோட்டத்திலிருந்து 3 திறன்மிகு உதவிளர்கள், 25 சாலைப் பணியாளர்களும், தஞ்சாவூர் கோட்டத்திலிருந்து 1 திறன்மிகு உதவியாளர், 20 சாலை பணியாளர்களும் புதுக்கோட்டை கோட்டத்திலிருந்து 1 திறன்மிகு உதவியாளர், 25 சாலைப் பணியாளர்களும் கோயம்புத்தூர் கோட்டத்திலிருந்து 1 திறன்மிகு உதவியாளர் 30 சாலைப் பணியாளர்களும்வருகை புரிந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் களஆய்வு செய்து முடித்தபின்பு பிற்பகல் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் அமைந்துள்ள விழுப்புரம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்களை வருவித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி பொறியாளர்கள் விரைந்து செயல்படுத்தி வெள்ள சீரமைப்பு பணிகளை செய்திட அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து சாலை உடைப்புகளையும் இன்றைக்குள் 100% நிறைவேற்றவும். மேலும், மேற்பரப்பு சேதமடைந்த சாலைகளை இம்மாதத்திற்குள் முடித்து தரவும் அறிவுரை வழங்கப்பட்டது.

The post விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் 329 கி.மீ. சாலைகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: