நிர்ணயித்த விலையை வழங்காததால் அதிருப்தி பசுந்தேயிலை விநியோகத்தை நிறுத்த விவசாயிகள் முடிவு

மஞ்சூர் : கடந்த அக்டோபர் மாதம் தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை வழங்காததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர். நிலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட 8 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தேயிலை தொழிற்சாலைகளில் விவசாய உறுப்பினர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.24.59 ஆக தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்தது. ஆனால் ஒரு சில கூட்டுறவு தொழிற்சாலைகளில் தேயிலை வாரியம் அறிவித்த விலையை வழங்காமல் 2 முதல் 3 ரூபாய் வரை குறைவாக அறிவித்தது.

தொழிற்சாலைகளின் இந்த நடவடிக்கை விவசாய உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த மாதம் எடக்காடு பகுதியில் நடந்த தேயிலை விவசாயிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி தமிழக சிறு, குறு, தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழிற்துறை ஆணையாளர் நிர்மல்ராஜ், செயலாளர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோரை நேரில் சந்தித்து தேயிலை விவசாயிகளின் குறைகளை எடுத்து கூறியதுடன் கடந்த அக்டோபர் மாதத்தில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் விநியோகித்த பசுந்தேயிலைக்கு தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இதையடுத்து இந்த மனுவை பெற்று கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கூட்டம் எடக்காடு பகுதியில் நடைபெற்றது. இண்ட்கோ சர்வ் இணை இயக்குனர் (தேயிலை) கணபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் 8கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் விவசாய உறுப்பினர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திலும் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பசுதேயிலைக்கு தேயிலை வாரியம் நிர்ணயம் செய்து அறிவித்த விலையை வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் குந்தா பகுதியை சேர்ந்த 8 கூட்டுறவு தொழிற்சாலைகளின் விவசாய உறுப்பினர் பிரதிநிதிகள் கூட்டம் எடக்காடு பகுதியில் நடைபெற்றது. விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை சேர்ந்த விவசாய உறுப்பினர் பிரதிநிதிகள் ஜெயக்குமார், அர்ஜூணன், மூர்த்தி, லட்சுமணன், துரை, போஜன், வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பசுந்தேயிலைக்கு கடந்த அக்டோபர் மாதம் தேயிலை வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை ஆணையர் பரிந்துரை செய்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 6ம் தேதிக்குள் தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை வழங்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் வரும் 9ம் தேதி முதல் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகிப்பதை நிறுத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் தெரிவித்தார்.

The post நிர்ணயித்த விலையை வழங்காததால் அதிருப்தி பசுந்தேயிலை விநியோகத்தை நிறுத்த விவசாயிகள் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: