×

நாடாளுமன்ற துளிகள்

* பயிர் கழிவுகளை எரித்து காற்று மாசு ஏற்படுத்தியதற்காக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகளிடம் இருந்து கடந்த நவம்பர் 30 வரையிலும் ரூ.1.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் ஒன்றிய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறி உள்ளார்.

* உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் அரசிடம் இல்லை என மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நேற்று தெரிவித்தார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65, உயர் நீதிமன்றத்தில் 62, மாவட்ட நீதிமன்றங்களில் 60 ஆக உள்ளது.

* அணுசக்தி துறையில் முதலில் பாதுகாப்பு, அடுத்து தான் உற்பத்தி என்கிற விதியை ஒன்றிய அரசு பின்பற்றுவதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் நேற்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை கடைபிடிப்பதாகவும், கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட அணுமின் நிலையங்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்வதற்கான தாக்க மதிப்பீடுகளை கட்டாயப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர அரசிடம் எந்த திட்டமும் இல்லை என மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

* கடந்த 5 ஆண்டுகளில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் 40 முதல் 50 சதவீதம் வரை மேம்பட்டுள்ளதாக ஒன்றிய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

* ஒரே நிறுவனத்திற்கு 2 விமான நிலையங்களுக்கு மேல் பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கக் கூடாது என எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என மக்களவையில் விளக்கம் அளித்த விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட லக்னோ, அகமதாபாத், மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களின் பராமரிப்பு பணி முழுமையான, போட்டி மற்றும் வெளிப்படையான செயல்முறை மூலம் குத்தகைக்கு விடப்பட்டதாக கூறி உள்ளார்.

* 2019 முதல் 2023 வரை பல்வேறு ஒன்றிய அரசு துறைகளில் 63 நிபுணர்கள் நேரடி நியமன முறைப்படி நியமிக்கப்பட்டதாக ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Union Minister of State for Environment ,Kirti Vardhan Singh ,Rajya Sabha ,Punjab ,Aryana ,
× RELATED புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே உ.பி வாலிபர் தீக்குளிப்பு