×

டெல்லியில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் சந்திப்பு: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி

புதுடெல்லி: இந்தியா, பூடான் இடையேயான முன்மாதிரியான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது என பிரதமர் மோடியும், பூடான் மன்னர் வாங்சுக்கும் உறுதி அளித்தனர். பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கேல் வாங்சுக் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவரை விமான நிலையத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று வரவேற்றார். பூடான் மன்னருடன் அவரது மனைவி ஜெட்சன் பெமா வாங்சுக் மற்றும் அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.

இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பூடான் மன்னர் வாங்சுக் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் பரஸ்பரம் வளர்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவது, தூய்மையான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, விண்வெளி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகள் சிறப்பாக இருப்பது குறித்து திருப்தி தெரிவித்தனர். அனைத்து துறைகளிலும் இந்த முன்மாதிரியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என உறுதி அளித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார தொடர்பை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த தலைவர்கள், பூடானின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவின் அருகிலுள்ள எல்லைப் பகுதிகளுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் பூடான் மன்னரால் முன்மொழியப்பட்ட தொலைநோக்குத் திட்டமான கெலெபு மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டி திட்டம் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பூடானின் 13வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பூடானுக்கான வளர்ச்சி உதவியை இரட்டிப்பாக்கியதை சுட்டிக்காட்டிய பிரதமர், பூடானின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் வலுவான ஆதரவை மீண்டும் உறுதி செய்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பூடான் மன்னரையும், ராணியையும் கவுரவிக்கும் வகையில் பிரதமர் மோடி மதிய விருந்தளித்தார்.

The post டெல்லியில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் சந்திப்பு: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,New Delhi ,King Wang ,Bhutan ,India ,King ,Jigme Kesar Namkale Wangchuk ,Dinakaran ,
× RELATED மோடியுடன் உரையாட ஜன.14 வரை முன்பதிவு