தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த இயக்கங்களுக்கு கொள்கை வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும், காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவை தமிழ்நாடு அரசு உருவாக்கி, பொருளியல் அறிஞர் மாண்டேக் சிங் அலுவாலியா, சுற்றுச்சூழல் ஆர்வலர் எரிக் சொல்-ஹெய்ம், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை அறிவியலாளர் மருத்துவர் சவுமியா சுவாமிநாதன், நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் இயக்குநர் பேராசிரியர் ரமேஷ் ராமச்சந்திரன், அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய முன்னாள் இயக்குநர் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்திருக்கிறோம்.
காலநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு அரசின் மாநில செயல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதுதான் இந்த குழுவின் கடமை. என்னுடைய தலைமையிலான இந்த குழுதான், இந்தியாவிலேயே காலநிலை மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட முதல் நிர்வாக குழு. அந்த வகையில், தமிழ்நாடு, இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக அமைந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக தமிழ்நாடு இருக்கிறது. 2070ம் ஆண்டுக்குள், ‘நெட் ஜீரோ எமிஷன்’ எட்டுவதற்கான வழிகாட்டியாக இந்த காலநிலை மாற்ற இயக்கம் திகழ்கிறது. இதற்கு உறுதுணையாக உருவாக்கப்பட்டுள்ள ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ மூலம், பல்லுயிர் பெருக்கத்தை முன்னிறுத்தவும், கார்பன் சிங்க்-ஐ அதிகரிக்கும் ஏற்கனவே 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன.
நம் மாநிலத்தின் மிக நீண்ட கடற்கரையை வலுப்படுத்தும் வகையில் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ‘அலையாத்திக் காடுகள்’, ‘கடல் புற்கள்’ மற்றும் பிற முக்கிய வாழ்விடங்களை உருவாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல் போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழல் அமைப்புகள், கார்பன் சிங்க்ஆகவும் கடல் அரிப்பில் இருந்து கடற்கரைகளை பாதுகாப்பதாகவும் அமையும். ‘காற்று மாசுபாடு சமீபகாலமாக ஒரு தீவிரமான சுகாதார சவாலாக மாறியிருக்கிறது’ என்று ஐ.நா. சொல்லியிருக்கிறது. நம்முடைய வழித்தோன்றல்களாக இந்த பூமியில் வாழப்போகின்ற குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான இயற்கைக்கு கேடுகள் விளைவிக்காத உலகத்தை வழங்க நம்முடைய வாழ்நாளில் திட்டங்களை முன்னெடுத்தோம்; அதில் வெற்றி பெற்றோம் என்று வரலாறு சொல்ல வேண்டும். அதுதான் காலத்துக்கும் நமக்கான பெருமை. இவ்வாறு அவர் பேசினார்.
The post பூமியில் வாழப்போகின்ற குழந்தைகள், எதிர்கால சந்ததியினருக்கு இயற்கைக்கு கேடு விளைவிக்காத உலகத்தை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை appeared first on Dinakaran.