தம்பி பழனிவேல் (56) அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-2020ல் அதிமுக ஆட்சி காலத்தில் தெருக்களில் சோலார் விளக்கு அமைக்கப்பட்டது. இதில் மணமேல்குடி, கந்தர்வகோட்டை, திருவரங்குளம், அறங்தாங்கி, அரிமளம், கறம்பக்குடி, திருமயம், குன்றாண்டார்கோவில் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் பழனிவேலுக்கு சொந்தமான நாகா டிரேடர்ஸ், முருகானந்தத்தின் மனைவி காந்திமதி நடத்தி வரும் வீரா ஏஜென்சி மற்றும் புதுக்கோட்டை பிரிட்டோ நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா(51) என்பவர் நடத்தி வரும் ‘ஹெச்எஸ்பி’ நிறுவனங்களில் இருந்து சோலார் விளக்குகள் வாங்கப்பட்டு முறைகேடு நடந்து உள்ளது, கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தினர் லாபம் அடைய அந்தந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி செய்ததாக புதுக்ேகாட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக 3.11.2023ல் லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி இமயவரம்பன் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் 30 வாட்ஸ் கொண்ட ஒரு சோலார் விளக்கு ரூ.10,952க்கு வாங்குவதற்கு பதில் ரூ.59,900க்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, கந்தர்வகோட்டையில் 72 விளக்குகளை காந்திமதி நடத்தும் வீரா நிறுவனத்திடமும், ஷேக்அப்துல்லா நடத்தும் எஸ்எஸ்பி நிறுவனத்திடம் ரூ.43லட்சத்து 55ஆயிரத்து 928 கொடுத்து வாங்கியுள்ளனர். அதேபோல் மணமேல்குடியில் 130 விளக்கு, அறந்தாங்கியில் 136, அரிமளத்தில் 96, திருமயத்தில் 99 விளக்குகள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. திருவரங்குளம், கறம்பக்குடியிலும் இதுபோல் முறைகேடு நடந்துள்ளது. மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 799 சோலார் தெருவிளக்குகள் வாங்கியதில் அரசுக்கு 3 கோடியே 72லட்சத்து 24 ஆயிரத்து 716 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி(59) (அறந்தாங்கி), ஆயிஷாராணி(59) (அரிமளம்), ரவி(61) (கறம்பக்குடி), சங்கர்(54) (திருமயம்), அரசமணி(56) (கந்தர்வகோட்டை), ரவிச்சந்திரன்(57) (மணமேல்குடி), கலைச்செல்வி(55) (குன்றண்டார்கோவில்), திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய கண்காணிப்பாளர் அசோகன்(62) மற்றும் பழனிவேல், காந்திமதி, ஷேக்அப்துல்லா ஆகிய 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2ம் தேதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முருகானந்தமும், பழனிவேலுவும் கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக கடந்த நவ.29ம் தேதி முருகானந்தம் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது வேலுமணி நண்பர் பழனிவேலு உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
8 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019ல் சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கும் பணி தொடர்பாக அறிவிப்பு, செய்தித்தாள் விளம்பரம் செய்யாமல், டெண்டர் பெறாமல், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கு வாங்கி அமைக்க உத்தரவு அளித்து, அதற்கான தொகையையும் விடுவித்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக தகவல் கிடைத்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வக்கோட்டை, மணமேல்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம், குன்றண்டார்கோவில், அறந்தாங்கி, அரிமளம், திருமயம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசமணி, ரவிச்சந்திரன், அசோகன், கலைச்செல்வி, ஆயிஷாராணி, சங்கர், சிவகாமி, ரவி ஆகியோர் மொத்தம் 799 சோலார் தெரு விளக்குகள் அமைத்ததில் ஊராட்சி ஒன்றியத்தில் சோலார் தெரு விளக்கு சம்மந்தமாக ஒப்பந்தபுள்ளி கோராமல், விளம்பரம் செய்யாமலும், அரசு விதிமுறைகளின் படி ஒப்பந்தப்புள்ளி கோரி விளம்பரம் வெளியிட்டும், குறைந்த விலைப்புள்ளிக்கு வேலை உத்தரவு வழங்கியது போல் போலி ஆவணங்களை தயார் செய்து, வெளிச்சந்தையில் (குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள அம்ருத் எனர்ஜி நிறுவனத்தில்,
ரூ.11,500/- கொள்முதல் செய்து, அதனை கிராம ஊராட்சியில் நிறுவலாம் என்ற நிலையில், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளராகப் பணியாற்றி வரும் முருகானந்தத்தின் மனைவி காந்திமதி என்பவருடைய புதுக்கோட்டையில் இயங்கி வரும் வீரா ஏஜென்ஜிஸ் நிறுவனம், அந்த சோலார் தெரு விளக்குகளை கொள்முதல் செய்தும் பின்னர், அவற்றை முருகனாந்தத்தின் தம்பி பழனிவேல் என்பவருடைய சென்னை, மேடவாக்கம், பத்மாவதி நகர், கோதவரியில் இயங்கி வரும் நாகா டிரேடர்ஸ் மூலமும், முருகானந்தத்தின் நண்பர் ஷேக் அப்துல்லாவின் கோயம்புத்தூர் துடியலூர் சௌடாம்பிகா நகரில் இயங்கி வரும் எச்எஸ்பி ஏஜென்ஜிஸ் ஆகியவற்றிற்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த இரு நிறுவனங்களும் ஒரு சோலார் தெரு விளக்கு ரூ.59,900 வீதம் மேற்கண்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 799 சோலார் தெரு விளக்குகளை ரூ.3,72,24,716 விற்பனை செய்துள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். இவ்வாறு அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அதிமுக ஆட்சியில் சோலார் விளக்கு அமைத்ததில் ரூ.3.72 கோடி மோசடி முன்னாள் அமைச்சர் வேலுமணி நண்பர் உள்பட 11 பேர் மீது வழக்கு: புதுகை லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி appeared first on Dinakaran.