இதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இதுவரை 430க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான இஎஸ்ஏ சூரியனின் ஒளிவட்ட பாதையை ஆய்வு செய்யும் விதமாக பிரோபா 3 என்ற செயற்கைக்கோள் வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் இருந்த போது, ராக்கெட் ஏவுதலுக்கு ஒருமணி நேரம் முன்பாக செயற்கைக்கோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது.
செயற்கைக்கோளின் உந்துவிசை கலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டதாகவும், உந்துவிசை கலன் செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை கட்டுப்பாட்டு துணை அமைப்பின் ஒரு பகுதி, இது விண்வெளியில் நோக்குநிலை மற்றும் சுட்டிக்காட்டுதலை கணிக்க பயன்படுகிறது என ஐரோப்பா விண்வெளி நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து, செயற்கைக்கோளில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும் பணியில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து செயற்கைக்கோளில் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு நேற்று மாலை 4.04 மணிக்கு ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டு, அதற்கான 8 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து சரியாக மாலை 4.04 மணிக்கு பிரோபா 3 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவப்பட்டது.
தொடர்ந்து ராக்கெட் 4 கட்டங்களாக அதன் பாகங்கள் நிர்ணயிக்கப்பட்ட இடைவெளிகளில் சரியாக பிரிந்து, ராக்கெட் ஏவப்பட்ட 18.44 நிமிடங்களில் பூமியில் இருந்து 1267 கி.மீ தூரத்தில் உள்ள உயர் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளில் கொரோனாகிராப் மற்றும் ஆக்குல்டர் என இரண்டு ஆய்வு பகுதிகள் உள்ளன. இந்த இரண்டு ஆய்வு பகுதிகளுக்கும் குறிப்பிட்ட செயல் திட்டங்களும் அதற்கு என தனித்தனி ஆய்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
பிரோபா 3 செயற்கைக்கோள் சுற்றுப்பாதை ஆய்வகமாக செயல்படும். இதில் புதுமையான அளவியல் சென்சார்கள் கட்டுப்பாட்டு வழிமுறைகளை சரிபார்க்கும், புதிய பணி கட்டுப்பாட்டு முறைகளை திறக்கிறது. 2 செயற்கைக்கோள்கள் அதற்கான குறிப்பிட்ட கட்டமைப்புகளுடன் 150மீ இடைவெளியில் வரிசையில் இருக்கும். இது சூரியனின் வெளிப்புற பகுதியையும் அதனை சுற்றியுள்ள வளிமண்டலத்தின் தொடர்ச்சியாக கண்காணிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு ஐரோப்பா விண்வெளி நிறுவனத்தின் பிரோபா 1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் தற்போது பிரோபா 3 செயற்கைக்கோள் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. திட்டம் வெற்றி பெற்ற பின்னர் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: பிஎஸ்எல்வி சி-59 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பிரோபா 3 செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட உயர்வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் ஆதித்யா எல்-1 உடன் இணைந்து செயல்படும்.
இது சூரிய அறிவியல் ஆராய்ச்சியில் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த திட்டம் வெற்றியடைய முழு அளவில் பணியாற்றிய திட்ட இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் என்.எஸ்.ஐ.எல் இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள். பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அதிக தூரம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது இதுவே முதன்முறை. இந்த மாதத்திற்குள் அடுத்த பிஎஸ்எல்வி சி 60 ஏவுதல் நடைபெறும். இது மிகவும் முக்கியமான திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
The post வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்: பிரோபா 3 செயற்கைக்கோள் உயர் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தம் appeared first on Dinakaran.