கரூர், டிச. 3: வங்க கடலில் ஏற்பட்டுள்ள பெஞ்சல் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அனைத்து தரப்பினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்படி, கரூர் மாவட்டத்தில் 95.10 மிமீ மழை பெய்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளது. இந்த மூன்று மாதங்களில் பெய்யும் மழைதான் அந்தந்த மாவட்டத்தின ஆண்டு சராசரி மழையை மாவட்டங்கள் பெற்று வருகிறது.அந்த வகையில், கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 652.20 மிமீட்டராகும். இதன்படி, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைதான் கரூர் மாவட்ட ஆண்டு சராசரி மழையை எட்ட உதவி வருகிறது.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் பனிக்காலமான ஜனவரி, பிப்ரவரியில் 16.8 மிமீட்டரும், கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் 109.5 மிமீட்டரும், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 238.4 மிமீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 287.5 மிமீட்டரும் என ஆண்டு முழுதும் இந்த சீசனில் 652.20 மிமீட்டர் மழையை மாவட்டம் பெற்று வருகிறது. இதுதான் கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவாக உள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் முதல் நவம்பர் 20ம்தேதி வரை கரூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் விரக்தியில் இருந்தனர்.
இந்நிலையில், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் பெஞ்சல் புயல் சின்னம் காரணமாக நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்து, கரூரை குளிர்வித்துள்ளது. இந்த மழையின் காரணமாக அனைத்து தரப்பினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனடிப்படையில், நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை கரூர் 8.40 மிமீ, அரவக்குறிச்சி 3.60 மிமீ, அணைப்பாளையம் 12.20 மிமீ, க.பரமத்தி 18 மிமீ, குளித்தலை 6.60 மிமீ, தோகைமலை 8.60 மிமீ, கிருஷ்ணராயபுரம் 8.30 மிமீ, மாயனூர் 12 மிமீ, பஞ்சப்பட்டி 9.40 மிமீ, பாலவிடுதி 2 மிமீ, மயிலம்பட்டி 6 மிமீ என மாவட்டம் முழுதும் 95.10 மிமீ மழை பெய்திருந்தது.
காலை முதல் மாலை வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கரூர் மாவட்டம் முழுதும் கடந்த மூன்று நாட்களாக லேசான அளவில்தான் மழை பெய்து வருகிறது.2 நாட்கள் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு இதமான சூழல் கரூரில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரூர் மாவட்டத்தில் 4 நாட்களாக மழை appeared first on Dinakaran.