கரூர், டிச. 2: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் கலப்படம் குறித்து துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மூன்று முக்கிய தொழில்களை கொண்ட நகரமாக கருர் மாநகரம் உள்ளது. இந்த தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களையும் குறி வைத்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட டீக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், சில டீக்கடைகளில், கலப்பட டீத்தூள் உபயோகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. கலப்பட டீத்துள் பயன்பாடு காரணமாக பல்வேறு உபாதைகள் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுககு முன்பு வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற டீக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கலப்பட டீத்துள் பயன்பாடு இருந்தால் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். தற்போதைய நிலையில், இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் கலப்பட டீத்தூள் பயன்பாடு சில கடைகளில் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கலப்பட டீத்தூள் விற்பனையை சிலர் மறைமுகமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், டீக்கடைகளில் கலப்பட டீத்துள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post கரூர் மாநகராட்சி பகுதி கடைகளில் கலப்பட டீ தூளா? அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.