ஆட்டையாம்பட்டி, டிச.4: திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பைரோஜி தரைப்பாலம் மூழ்கியதால், போக்குவரத்து முடங்கியது. பென்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டத்தில் சுமார் 4 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. சேலம், நாமக்கல் மாவட்ட எல்லை வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. பைரோஜியில் இருந்து வெண்ணந்தூர் செல்லும் வழியில் திருமணிமுத்தாற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக மல்லூர், வெண்ணந்தூர், அரசம்பாளையம், சொறிமலை உள்ளிட்ட 12 கிராம மக்கள் சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், பைரோஜி தரைப்பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் தரைப்பாலம் மூழ்கியதுடன், சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த இரு நாட்களாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், சாலையை மூடி சீல்வைத்து நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் குறைந்ததும், பாலத்தின் தன்மையை ஆராய்ந்த பிறகே போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக தரைப்பாலத்தின் வழியாக 4 சக்கர வாகனங்களுக்கு தடைசெய்யப்பட்டும், டூவீலர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பைரோஜி தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து முடங்கியது appeared first on Dinakaran.