- தமிழ்
- தமிழ்நாடு
- மாநில அறிவியல் கவுன்சில் மற்றும்
- தொழில்நுட்பம்
- தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் முயற்சி
கணிதம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்பவர்களை விட, அதில் நான் பாஸ் ஆவதே கஷ்டம் என்று சொல்லும் மாணவர்கள்தான் அதிகமாக உள்ளனர். பொதுவாக, துவக்கப் பள்ளி வகுப்புகளில் வெறும் கூட்டலும், கழித்தலும்தான் இருக்கும். மேலும் 10ம் வகுப்பு கணிதம் வரை மாணவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. ஆனால் உயர்நிலைப் படிப்புகளில்தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. கணிதம் என்பது பல்வேறு மாறுதல்களைப் பெற்று உருமாற்றம் பெறுகிறது.
கணிதத்தை வெறும் எண்களாக கொடுப்பதால்தான் பல மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. அதுவே வாழ்வியல் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி கணிதத்தை கற்பித்தால் நிச்சயம் எளிதாகவே இருக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். கணிதம் என்பது மாணவர்களுக்கு வெறும் பாடமாக மட்டுமே இருப்பதால் அதனை வெறுமையான பாடமாகக் கருதுகிறார்கள். இது நமக்கு வரவே வராது என்று தாழ்வு மனப்பான்மை அடைகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த முறை பொறியியல் கல்லூரிகளை விட, கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அதிலும், பிசிஏ, பிபிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி காட்சித் தகவலியல், பி.காம் உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்து வருகின்றனர். மேலும், பிஎஸ்சி கணிதம் படிப்பில் மிக மிகக் குறைவான அளவிலேயே மாணவர்கள் சேர்ந்து வருகின்றன.
இதனால் தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகள், பிஎஸ்சி கணிதம் படிப்பை அடியோடு தூக்கிவிட்டன. இவற்றில் 4 கல்லூரிகளில் ஒரு மாணவன் கூட பிஎஸ்சி கணிதத்தில் சேரவில்லை என்பதுதான் மிக வேதனையான விஷயம். இந்த நிலை தொடர்ந்தால், நாளை பள்ளி – கல்லூரிகளில் கணித ஆசிரியர்களுக்கு பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும். இப்போது மருத்துவம், பொறியியல், ஐஐடி போன்ற மேற்படிப்புகளுக்கும், பல அரசு வேலைகள், வங்கிப் பணிகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயமாகி விட்டது.
இவற்றில் கணிதத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அப்படியிருக்கும் போது, கணக்கு ஆசிரியர்கள் இல்லாமல் போனால் எதிர்கால தலைமுறையினருக்கு வேலை கிடைப்பதே சிரமமாகிவிடும் என்பதோடு, வருங்காலத்தில் தமிழகத்தில் அறிவியலார்களும், விஞ்ஞானிகளும் உருவாவதும் குறையும் என கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் எச்சரிக்கின்றனர். இந்த நிலையை மாற்றி, கணிதம் என்றால் கஷ்டம் என்ற எண்ணத்தை மாணவர்கள் மனத்தில் இருந்து அகற்றி, மாணவர்களை கணிதத்தில் சிறந்தவர்களாக மாற்ற தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் புதிய முயற்சியை தொடங்கி உள்ளது.
நடப்பாண்டு தேசிய கணித தினத்தை இந்த டிசம்பரில் தமிழகத்தின் 38 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 மையங்களில் கொண்டாட உள்ளது. அதன்படி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கணித பயிற்சி பட்டறையை மாவட்ட மற்றும் மாநில வாரியாக நடத்த உள்ளனர். அதன்மூலம், கணிதப் போட்டி மற்றும் கணித மாதிரி உருவாக்கும் போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கான புதுமையான கண்காட்சிப் போட்டிகள், பொதுமக்களுக்கு அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பேரணிகள் ஆகியவற்றை நடத்த உள்ளனர்.
அன்றாட வாழ்வியலில் கணிதத்தின் பயன்பாடுகளில் கவனம் செலுத்தும் இந்த திட்டம், கணித கற்பித்தலை சுவாரஸ்யமாக மாற்ற ஆசிரியர்களுக்கு புதுமையான வழிமுறைகளை வழங்கும். இதன்மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்ளுக்கு எளிய முறையில் கணிதத்தை கற்று கொடுப்பார்கள். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம், இந்த திட்டம் கணித படைப்பாற்றலை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கான அடித்தளமாகவும் இருக்கும் என்கிறார், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட். மேலும் அவர் கூறியதாவது:
இந்த முயற்சி கணிதத்தை அனைவருக்கும் எளிதாக்க கூடிய ஒன்றாக இருக்கும். கணிதத்தை பார்த்து பயப்படும் மாணவர்கள், இனிமேல் அதனை எளிதாக கையாளுவார்கள். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி என அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த பயிற்சி பட்டறை பயனுள்ளதாக இருக்கும். 6 முதல் 12ம் வகுப்பு வரை என 20 ஆயிரம் மாணவர்களை இலக்காக வைத்துள்ளோம்.
இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் அடுத்த கல்வியாண்டில் உயர்கல்வியில் கணித பாடத்தில் மாணவர்கள் சேர்க்கை முன்பை போலவே அதிகமாக இருக்கும். பள்ளிகளில் இந்த திட்டத்தை தொடங்கினால் தான் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும். எனவே பள்ளிக் கல்வித்துறையின் அனுமதியுடன் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை அளிக்க கணித வல்லுநர்களை அழைத்து வர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
* மாவட்ட அளவிலான செயல்பாடுகள்
1 பள்ளி மாணவர்களுக்கான கணிதப் போட்டி மற்றும் கணித மாதிரி உருவாக்கும் போட்டிகள்.
2 கல்லூரி மாணவர்களுக்கான புதுமையான கண்காட்சிப் போட்டிகள்.
3 அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பேரணி.
மாநில அளவிலான நிகழ்வுகள்
* கணிதத்தின் ஆக்கப்பூர்வமான கலை மற்றும் அறிவியல் பயிற்சி பட்டறை
* மாணவர்களிடையே ஆர்வத்தை உருவாக்கி, கணிதத்திற்கான பயத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
* அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாட்டை நிரூபிக்கும் திட்டங்கள் மற்றும் மாதிரிகளை உருவாக்க பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து கற்றுக்கொள்வர்.
* பயிலரங்கின் போது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், எதிர்கால முயற்சிகளில் திட்டங்களை மீண்டும் பயன்படுத்தி, மேலும் விரிவுபடுத்தி, தமிழ்நாட்டின் சொத்துகளாக செயல்படுவார்கள்.
ஆசிரிய மேம்பாட்டு திட்டம்
* அன்றாட வாழ்வியலில் கணிதத்தின் பயன்பாடுகளில் கவனம் செலுத்தும் இந்த திட்டம், கணித கற்பித்தலை சுவாரஸ்யமாக மாற்ற ஆசிரியர்களுக்கு புதுமையான வழிமுறைகளை வழங்கும்.
மாநில அளவிலான கண்காட்சி
* ஒவ்வொரு மையத்திலிருந்தும் சிறந்த ப்ராஜெக்ட் காட்சிப்படுத்தப்படும்.
* மிகவும் புதுமையான மற்றும் சமூகப் பயன் தரும் projects-க்கு காப்புரிமை வசதி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு வாய்ப்புகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்படும்.
* மாவட்டங்களை இணைக்கும் 14 மையங்கள்
1. புனிதஜோசப் பொறியியல் கல்லூரி – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
2. கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி – கோயம்புத்தூர், நீலகிரி
3. கொங்கு பொறியியல் கல்லூரி – ஈரோடு, திருப்பூர்
4. விவேகானந்தர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- நாமக்கல், கரூர், சேலம்
5. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்- திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி
6. தேசிய கல்லூரி – திருச்சி, அரியலூர், பெரம்பலூர்
7. கிங்ஸ் பொறியியல் கல்லூரி – தஞ்சாவூர், புதுக்கோட்டை
8. தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி – கள்ளக்குறிச்சி, கூடலூர், விழுப்புரம்
9. ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – தர்மபுரி, கிருஷ்ணகிரி
10. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி – திண்டுக்கல், தேனி
11. அமெரிக்கன் கல்லூரி – மதுரை, சிவகங்கை
12. முகமது சதக் பொறியியல் கல்லூரி – விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம்
13. ஆக்ஸிலியம் கல்லூரி- வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை
14. ஒன்றிய பல்கலைக்கழகம் – நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
The post மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த புதிய திட்டம்: கணிதம் இனி சக்காது; தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் புதுமுயற்சி appeared first on Dinakaran.