×
Saravana Stores

ஐயப்பன் அறிவோம் 17: தெய்வக் குழந்தை

மணிகண்டன் விலங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னர் ராஜசேகர பாண்டியனும் பம்பா நதி ஓடக்கூடிய மதங்க காட்டுப்பகுதிக்கு தனது படைகளுடன் வருகிறார். ஆனால் விலங்குகள் கண்ணில் தென்படவில்லை, இதனால் அப்பகுதியில் ஓய்வெடுக்கிறார். இதனை அறிந்த சிவன், பராசக்தி, திருமால், அரிகரசுதனுக்கு ஆசி வழங்கி பூலோகம் அனுப்புகின்றனர். அரிகரசுதன் பூமிக்கு வருவதற்காக தந்தை சிவன் தலையில் சூடியுள்ள தாய் ஆகாய கங்கையை, ‘‘நான் அவதாரத்திற்காக பூலோகம் செல்லும்போது, அரணாக உடன் வரவேண்டும்’’ என கேட்டுக்கொள்கிறார்.

மகனின் வேண்டுக்கோளை ஏற்ற கங்கை, மதங்க முனிவர் காட்டில் முனிவர் பரசுராமர்(விஷ்ணு அவதாரம்) உருவாக்கிய பம்பா எனும் நதி, தனது அம்சத்தில் ஒன்றாக விளங்கக்கூடியது. எனவே அதில் இறக்கி விடுகிறேன் எனக்கூறி பூலோகமான பம்பை ஆற்றங்கரையில் இறக்கி விடுகிறார். அன்று முதல் பம்பா நதியில், புனித கங்கை கலந்து தட்சிணா கங்கையாகி, புண்ணிய நதியாகிறது பம்பா நதி. பந்தள நாட்டில் உள்ள மதங்கா காடுகள் நிறைந்த அந்த பம்பா நதி கரையோரம் கழுத்தில் துளசி மற்றும் ருத்ராட்சம் பொருந்திய ரத்தின மணி மாலையோடு அழுகையுடன் வீற்றிருந்தார் அரிகரசுதன்.

அப்போது அப்பகுதியில் ஓய்வில் இருந்த மன்னர் ராஜசேகரபாண்டியனுக்கு நதியின் கரையின் மேலே குழந்தையின் அழுகுரல் ஒன்று கேட்கிறது. மனிதர் நடமாட்டம் இல்லாத இந்த அடர்ந்த மலை காட்டிற்குள் குழந்தை சத்தமா? என சந்தேகத்துடன் அந்த திசையை நோக்கி சென்று பார்வையிட்டு வருமாறு, தனது வீரர்களை அனுப்பி விட்டு, தானும் பின் தொடர்ந்து சென்றார். அப்போது அசிரீரி போன்று ஒரு ஒளி வந்து மறைகிறது. அந்த ஒளி வந்த இடத்தை பார்த்த மன்னருக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம் ஏற்பட்டது.

காரணம், கழுத்தில் மணி மாலையோடு, ராஜகுமாரன் போன்ற அம்சமும், தெய்வீக ஒளி பொருந்திய முகத்துடன் கூடிய குழந்தை தென்பட்டது. பெற்றோர் யாரேனும் இருக்கின்றனரா என வீரர்களை தேடச் சொல்லி சுற்றுப்புறமும் பார்க்கின்றனர். அந்த காட்டு பகுதியில் மனித நடமாட்டத்திற்கு அறிகுறிகளே தென்படவில்லை. இதனால் ஆனந்தமடைந்த மன்னர், பூர்வஜென்ம வரத்தின்படி குழந்தை இல்லாத தனக்கு, ஆண் குழந்தையை இறைவன் பரிசளித்ததாக எண்ணி மகிழ்கிறார்.
சுவாமியே சரணம் ஐயப்பா… நாளையும் தரிசிப்போம்.

* சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு

The post ஐயப்பன் அறிவோம் 17: தெய்வக் குழந்தை appeared first on Dinakaran.

Tags : Ayyappan ,King ,Rajasekhara Pandyan ,Madanga forest ,Pampa River ,Shiva ,Parasakthi ,Tirumal ,Arikarasuthan ,
× RELATED ஐயப்பன் அறிவோம் நீ நானாக…!