×
Saravana Stores

கடந்த 20 மாதங்களில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 13 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: மதுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவு; மருத்துவர்கள் தகவல்

உடலில் உள்ள எந்த ஒரு உள் உறுப்புக்கு இல்லாத சிறப்பு கல்லீரலுக்கு உண்டு. கல்லீரல் பாதிப்பு உண்டாகும் போது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் திறனை கொண்டது. அதாவது நகம் வெட்டினால் மீண்டும் வளர்வது போன்று வளரும் தன்மை கல்லீரலுக்கு உண்டு. வாழ்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக கல்லீரல் பாதிக்கப்பட தொடங்குகிறது. உலகளவில் கல்லீரல் நோயால் ஆண்டுதோறும் 2 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. அதாவது 25 இறப்புகளில் ஒருவர் கல்லீரல் நோயால் உயிரிழக்க காரணமாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு முக்கிய காரணமாக விளங்குவது மதுப் பழக்கம். சமீப காலங்களில் அதிகளவில் மதுப்பழக்கம் உள்ளவர்களிடையே, கல்லீரல் அழற்சி நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழற்சி நோயை தடுக்கும் வண்ணம் தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனியாக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் கிட்டத்தட்ட 150லிருந்து 200 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் உள் நோயாளிகளுக்கு என 90 படுக்கைகள் உள்ளன.

கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. இது ஒருபுறம் இருப்பினும், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூலி தொழிலாளர் ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டது. ரூ.7 கோடியில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டு முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 20 மாதங்களில் 13 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் பிரேம்குமார் கூறியதாவது: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் நோய்க்கு தரமாக சிகிச்சை வழங்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது, சிகிச்சையை தாண்டி தற்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 13 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இணை நோய் உள்ளவர்களுக்கும் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.30 முதல் ரூ.35 லட்சம் வரை செலவாகும்.

ஆனால் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறகு அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்கணிக்கப்படும். ஹெபடிடிஸ் சி பாதிக்கப்பட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம், ஹெபடிடிஸ் பி பாதிக்கப்பட்டால் கல்லீரல் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். சில முறைகளில் குணப்படுத்தலாம். எனவே, பொதுமக்கள் கல்லீரலை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும். தற்போது செய்ய 13 அறுவை சிகிச்சையில் அதிகப்படியாக மதுபழக்கத்தால் கல்லீரலை இழந்தவர்களுக்கு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த பட்சமாக கொழுப்பு கல்லீரல் காரணமாக ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும். தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மூளை சாவு அடையும் நபர்களிடமிருந்து எடுக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இனி வரக்கூடிய காலங்களில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் ரத்த உறவுகளிடம் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை கல்லீரலை பெற்று அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* கல்லீரலை பாதுகாக்கும் வழிகள்…
மதுப்பழக்கம், போதைமருந்து, துரித உணவுகள், மசாலா, எண்ணெய் உணவுகள் உள்ளிட்ட பழக்கவழக்கங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். அதேபோல, புரத உணவுகளை அதிகம் எடுத்து கொண்டு, கார்போஹைட்ரேட் உணவை குறைத்து கொள்ள வேண்டும். குறிப்பாக நன்றாக தூங்க வேண்டும். இறுதியாக முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆரம்ப கட்ட அறிகுறிகள்..
* கால் வீக்கம்
* வயிற்றில் நீர் சேர்வது
* தூக்கமின்மை. ஆனால் பகலில் தூக்கம் வரும்
* அதிக சோர்வு
* மஞ்சள் காமாலை (மஞ்சள் காமாலை என்பது நோயல்ல. கல்லீரல் பாதிப்பின் அறிகுறி) பலரும் இதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் கல்லீரலின் பணி ஆனது 30 முதல் 40% வரை வேலை செய்வதை நிறுத்தியுள்ளது.

சிறப்பு சிகிச்சைக்கு தனி கட்டிடம் கல்லீரலை அதிகம் பாதிக்கும் நோய்கள்…
* மது அருந்தினால் ஏற்படும் கல்லீரல் நோய்
* கொழுப்பு படிவதால் ஏற்படும் கல்லீரல் நோய்
* வைரல் கிருமிகளால் ஏற்படும் கல்லீரல் நோய்
* பரம்பரை வழியாக வரும் கல்லீரல் நோய்

The post கடந்த 20 மாதங்களில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 13 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: மதுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவு; மருத்துவர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Government Hospital ,Dinakaran ,
× RELATED ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு...